டாஸ்மாக் கடை முன் பெண்கள் முற்றுகையிட்டு ஒப்பாரி

தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அக்கடை முன் பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு, ஒப்பாரி வைத்து, கும்மியடித்து முழக்கங்களை எழுப்பினர்.

தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அக்கடை முன் பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு, ஒப்பாரி வைத்து, கும்மியடித்து முழக்கங்களை எழுப்பினர்.
தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட கீழவஸ்தாசாவடி ஆனந்த நகரில் ஓராண்டுக்கு முன்பு மனைப் பிரிவு உருவாக்கப்பட்டது. இப்பகுதியில் இதுவரை  தெரு மின் விளக்கு வசதி செய்யப்படவில்லை என்பதால், இரவு நேரத்தில் பாதுகாப்பற்றச் சூழல் உள்ளது.
இந்நிலையில், மன்னார்குடி நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடை மூடப்பட்டதால், அக்கடை ஆனந்த நகரில் காலியாக உள்ள ஒரு வீட்டில் அண்மையில் திறக்கப்பட்டது.  ஆனந்த நகரில் மதுக்கடையை அமைக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரகத்தில் இருமுறை மனு அளித்தனர். எனினும், அப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டது. மது அருந்துவோர் காலி மனைகளில் அமர்ந்து அருந்துவதும், அங்கேயே படுத்துக் கொள்வதும் தொடர்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.
இதனால் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பெண்கள் மதுக்கடை முன் வியாழக்கிழமை முற்றுகையிட்டு, ஒப்பாரி வைத்து, கும்மியடித்து கடையை மூடுமாறு வலியுறுத்தினர். காவல் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். கண்ணன், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இக்கடை புதன்கிழமையுடன் மூடப்பட்டுவிட்டதால், இனிமேல் திறக்க வாய்ப்பில்லை எனக் கூறினர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com