நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மருத்துவ உதவி வழங்க வலியுறுத்தல்

புகையிலை, சீவல், பாக்கு உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மருத்துவ உதவி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோழி கூட்டமைப்பு வலியுறுத்தியது.

புகையிலை, சீவல், பாக்கு உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மருத்துவ உதவி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோழி கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இந்தக் கூட்டமைப்பை மாநில அளவில் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் டீப்ஸ் தொண்டு நிறுவன மாநில ஒருங்கிணைப்பாளர் பி. பிரசாந்த் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தது:
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், ஈரோடு உள்பட 10 மாவட்டங்களில் உள்ள சிறு, குறு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களை ஒருங்கிணைத்து தோழி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பணியாற்றும் பெண்களிடையே தொழிலாளர் நலச் சட்டங்கள், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இக்கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் உள்ள புகையிலை, சீவல், பாக்கு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களை ஒருங்கிணைக்கும் பணியை செட் இந்தியா நிறுவனமும், டீப்ஸ் நிறுவனமும் செய்து வருகின்றன.
புகையிலை, சீவல், பாக்கு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் காசநோய் போன்ற பல்வேறு உடல் நலப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, அவர்களுக்கு நிறுவனங்கள் மருத்துவ வசதி, மருத்துவ உதவி செய்து தர வேண்டும்.
பாதுகாப்பான பணியிடம், அரசின் குறைந்தபட்ச கூலி, பணி நிரந்தரம் ஆகியவை செய்யப்பட வேண்டும். ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை, அதிகபட்ச நேரம் வேலை செய்தால் சட்டப்படியான கூலி வழங்க வேண்டும்.
மேலும் அவர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டத்தின்படி பாதுகாப்பு உரிமைகள் வழங்க வேண்டும். சட்டச் சலுகைகளான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்புறுதி, விபத்துக் காப்பீடு, இழப்பீடு ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றார் பிரசாந்த்.
செட் இந்தியா நிறுவன இயக்குநர் பி. பாத்திமாராஜ், தோழி கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். ராஜேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com