மண் வளம் பெற கோடை உழவு அவசியம்

கோடை காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ளும் அடுத்த சாகுபடிக்கான முன்னேற்பாடுகளில் முக்கியமானது கோடை உழவு என்றார் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர்.

கோடை காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ளும் அடுத்த சாகுபடிக்கான முன்னேற்பாடுகளில் முக்கியமானது கோடை உழவு என்றார் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடை உழவு செய்வதால் மண் நன்கு பொலபொலப்பாகி மண்ணின் தன்மை மேம்படுவதுடன், மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு மண்ணில் உள்ள சத்துக்கள் நிலைநிறுத்தப்படுகின்றன. மண்ணின் இறுக்கம் தளர்ந்து மழைநீர் கிரகிக்கப்பட்டு மண்ணின் ஆழம் அதிகமாவதுடன் நல்ல காற்றோட்டமும் கிடைக்க வழி ஏற்படுகிறது. இதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் நன்றாக பெருக்கம் அடைந்து பயிர்களுக்கு சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கின்றன.
மழை நீரை மண்ணுக்குள் உள்வாங்கி நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் வழி செய்கிறது. கோடை உழவு செய்யப்பட்ட நிலத்தில் மழைநீர் அதிக ஆழம் செல்வதால் நீர் ஆவியாவது குறைவதுடன் மண் வளம் மேம்படும். அடுத்த பருவத்தில் பயிர் விளைச்சல் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
கோடை உழவு செய்வதால் களைச்செடிகள் அழிக்கப்பட்டு மக்கி மண்ணில் உரமாகின்றன. மேலும் களைகளின் இனவிருத்தி அழிக்கப்படுவதுடன் அதை சார்ந்து வாழும் பூச்சிகள் அதிகம் பெருகாமல் கட்டுப்படுத்தப்படுகின்றன. கோடை காலத்தில் செய்யப்படும் இடை உழவின் மூலம், வரும் பருவத்தில் களைகளின் தாக்கம் வெகுவாக குறையும். முதல் பயிரின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படும்.
கடந்தமுறை சாகுபடி செய்த பயிர்களின் அறுவடைக்குப்பின் வயல்களில் களைகள் வளர்ந்து  பூச்சிகளுக்கு உணவாகவும் உறைவிடமாகவும் அமைகின்றன. வறட்சி காலத்தில் நிலம் காய்ந்து வெடிப்புடன் காணப்படுவதுடன், களைகள் ஆக்கிரமித்து பூச்சி நோய் தாக்குதலால் மண் வளம் பாதிப்படைகிறது. பொதுவாக பூச்சிகள் தங்களது இனப்பெருக்கத்துக்கான முட்டைகளை மண்ணிலேயே பாதுகாப்பாக இட்டு வைக்கின்றன. இவை மழைக்காலத்தில் புழுக்களாக வெளிவந்து பயிர்களை உண்டு வளர்கின்றன. இவற்றை அழிப்பதற்கு கோடை காலத்தில் மழை பெய்யும் போது கோடை உழவு செய்வதே சிறந்த வழியாகும்.
கோடை மழை பெய்தவுடன் விவசாயிகள் உழுது கொண்டிருக்கும் நிலத்திலுள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள் ஆகியவை பறவைகளாலும், சூரிய வெப்பத்தாலும்   அழிக்கப்படுகின்றன. இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு நிர்வாக முறையில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, மழை நீரை உள்வாங்கி மண்ணுக்கு உயிரூட்டவும், பயிர் செய்யும் காலத்தில் பூச்சி நோய் தாக்குதலை குறைக்கவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கச் செய்யவும் கோடை உழவு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com