வருவாய் ஆய்வாளரை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்

கும்பகோணம் அருகே வியாழக்கிழமை வருவாய் ஆய்வாளரை அலுவலகத்துக்குள் வைத்து பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் அருகே வியாழக்கிழமை வருவாய் ஆய்வாளரை அலுவலகத்துக்குள் வைத்து பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழன்மாளிகை உள்வட்டத்தின் வருவாய் ஆய்வாளராக ராஜ்குமார் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் பம்பப்படையூரில் உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் ராஜ்குமார் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் இருந்ததாகவும், அலுவலகத்தை உட்புறமாக பூட்டி கொண்டதாகவும் கூறி அப்பகுதி மக்கள் அலுவலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு பூட்டு போட்டு பூட்டினர். பின்னர் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
கும்பகோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன், பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று வருவாய் ஆய்வாளரை அலுவலகத்திலிருந்து மீட்டனர். உடன் இருந்த பெண் குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியது:
வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அனுமதியின்றி ராஜ்குமார் உதவியாளர் எனக் கூறி, ஒரு பெண்ணை பணிக்கு வைத்திருந்தார். தினமும் மதியத்துக்கு பிறகு அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களை எல்லாம் மூடிக் கொண்டு இருவரும் உள்ளே இருந்து வந்தனர். கடந்த 15ஆம் தேதி கும்பகோணம் சார் ஆட்சியரிடம் இதுதொடர்பாக புகார் தெரிவித்தபோது, எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக் கூடாது. ஆதாரத்தோடு நிரூபியுங்கள் எனக் கூறினார்.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் இருவரும் அலுவலகத்தில் கதவை சாத்திக் கொண்டு உள்ளே இருந்தபோது, நாங்கள் வெளியே பூட்டிவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம் என்றனர். இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் கார்த்திகேயன் கூறியது:
அலுவலகத்தில் அனுமதியில்லாமல் தனி நபரை பணிக்கு வைத்திருந்தது தவறு. இதுதொடர்பாக ராஜ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com