காவிரி பிரச்னைக்காக தஞ்சாவூரில் ஜூன் 1 முதல் தொடர் உண்ணாவிரதம்

காவிரிப் பிரச்னைக்காக தஞ்சாவூரில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின்

காவிரிப் பிரச்னைக்காக தஞ்சாவூரில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற இக்குழுவின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
ஒற்றைத் தீர்ப்பாயத்துக்கான அவரச சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு, கர்நாடகத்துக்குப் புதிய காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப் போகிறோம் எனக் கூறி அதற்கு கருத்து கேட்டு கடிதம் எழுதுகிறது மத்திய அரசு. அதை கர்நாடக அரசு ஏற்காமல் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது.
தமிழக அரசுக்கும் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தமிழக அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்தவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்தவில்லை. காவிரி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடமே உள்ளது. மத்திய அரசுதான் காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்குத் துரோகம் இழைக்கிறது. எனவே, வரும் குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்து தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி தஞ்சாவூரில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்குப் பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். குடிமராமத்துப் பணிக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறுவதாக முதல்வர், அமைச்சர்கள், அலுவலர்கள் அறிவிக்கின்றனர். ஆனால், எந்தவொரு இடத்திலும் விவசாயிகளின் பங்களிப்புடன் நடைபெறுவதாகத் தெரியவில்லை. அது, முற்றிலும் முறைகேடுக்கு உள்ளாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, திங்கள்கிழமை (மே 22) அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் மாவட்ட அமைப்பாளர்கள் நேரில் சந்தித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் குடிமராமத்துப் பணிகள் குறித்தான முழு விவரங்களையும் பெறவுள்ளனர். பின்னர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படவுள்ளது என்றார் பாண்டியன்.
கூட்டத்தில் தமாகா விவசாய அணித் தலைவர் புலியூர் அ. நாகராஜன், குழுவின் மாநில கெளரவத் தலைவர் பாலு தீட்சிதர், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் த. புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com