ஆட்சியரக வளாகத்தில் முன்னாள் நகராட்சி ஊழியர் தீக்குளிக்க முயற்சி

வழக்கிற்கான இழப்பீடு வழங்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை முன்னாள் நகராட்சி ஊழியர்  தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கிற்கான இழப்பீடு வழங்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை முன்னாள் நகராட்சி ஊழியர்  தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு மகன் மணிகண்டன் (28). இவர் பட்டுக்கோட்டை நகராட்சியில் கடந்த ஓராண்டுக்கு முன் தாற்காலிக எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் நகராட்சியில் பயன்பாட்டில் இருந்த 4 மோட்டார்களை திருடி விற்று விட்டதாக நிரந்தர பணியாளர் ஒருவர் அங்குள்ள காவல்நிலையத்தில் புகாரளித்தார். காவல்துறையினரின் விசாரணையில், மணிகண்டன் திருடவில்லை எனத் தெரியவந்ததை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.
 இந்நிலையில் தன் மீது புகாரளித்த நிரந்தரப் பணியாளரும், நகராட்சியும் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையரிடமும், தஞ்சாவூர் ஆட்சியரிடமும் மணிகண்டன் பல முறை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பெட்ரோல் நிரப்பப்பட்ட கேனுடன், தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். இவரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்த முயன்ற போது, பெட்ரோலை உடல்மீது ஊற்ற முயன்றார். இருப்பினும் போலீஸார் இவரை தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 இதைத் தொடர்ந்து இவர் அளித்த மனுவை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் என். சக்திவேல், உரிய நடவடிக்கை எடுக்க பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாக அலுவலருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து வெளியில் வந்த மணிகண்டனை போலீஸார் எச்சரித்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com