சம்பா சாகுபடிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார்ஆட்சியர் எம். பிரதீப்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளும், சார் ஆட்சியரின் பதிலும்:
திருவைகாவூர் மோகன்:  திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை,  கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் பெற்றுத் தர நடவடிக்கை தேவை.
சார் ஆட்சியர்:  திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ரூ. 11 கோடி நிலுவை வைத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த அக். 6ஆம் தேதி வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் ஆட்சியர் நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் மூன்று மாத கால அவகாசம் கேட்டு பதிலளித்துள்ளனர். அந்த தொகை விரைவில் பெற்று தரப்படும்.
மருத்துவக்குடி முருகேசன்:  கூனஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  விவசாயிகளுக்கு பயிர் கடனுக்குரிய  பணம் வழங்கப்பட்டுள்ளதாக பட்டியலில் உள்ளது. ஆனால் இதுவரை அவர்களின் வங்கிக் கணக்குக்கு பணம் செல்லவில்லை. குறுவை மற்றும் சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தில் இதுவரை எவ்வளவு விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இந்த திட்டத்தில் இதுவரை ஒரு பலனும் கிடைக்கவில்லை.
சுவாமிமலை சுந்தரவிமலநாதன்:  தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால்  தற்போது டெல்டாவில் மழை இல்லை. நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தண்ணீர் தேவை இருப்பதால், மேட்டூர் அணையிலிருந்து உடனடியாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்.
பாபாநாசம் பகுதியில் கொங்கன் வாய்க்கால்,  மணப்படையூர்,  புதுப்படையூர் வாய்க்கால் ஆகியவை தூர்வாரப்படாமல்  உள்ளதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   
சார்ஆட்சியர்:  மேட்டூர் அணை திறக்கப்படுவது குறித்து அரசுக்கு தகவல் அனுப்பப்படும்.  விவசாயிகள் இங்கு எழுப்பிய பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு தெரியப்படுத்தி நிவர்த்தி செய்யப்படும் என்றார். கூட்டத்தில் வேளாண்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com