பாஸ்டல் சிறையிலிருந்து தப்பியோடிய கைதி, உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றபோது கைது

தஞ்சாவூரில் உள்ள இளைஞர் சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலையில் தப்பியோடிய விசாரணைக் கைதி,  மாலையில் உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரில் உள்ள இளைஞர் சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலையில் தப்பியோடிய விசாரணைக் கைதி,  மாலையில் உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இளைஞர் சிறை (பாஸ்டல் பள்ளி) உள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகள் இங்கு அடைக்கப்படுவர். இதுபோல்,   இங்கு 30-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
 இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை காலை சிறையிலிருந்த இளைஞர்களுக்கு காலை உணவு வழங்கிய பிறகு, வருகை பதிவு எடுத்த போது, ஒரு கைதியை மட்டும் காணவில்லை. விசாரணையில் அவர், ஒரத்தநாடு வட்டம் பின்னையூர் கீழக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரகு (19) என்பதும், இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரைக் கடத்தியதாக ஒரத்தநாடு போலீஸாரால் நவம்பர் 8-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தஞ்சாவூர் இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் இவர் சிறையிலிருந்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து சக கைதிகளிடம் போலீஸார் விசாரித்தபோது, சிறை வளாகத்தில் உள்ள மரத்தைப் பயன்படுத்தி, கைதி ரகு சிறை சுவரைத் தாண்டிக் குதித்து தப்பியோடியது தெரியவந்தது.
இதுகுறித்து தஞ்சாவூர் டிஎஸ்பி தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீஸார் விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து மாலையில் ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீஸார்,  பள்ளிஅக்ரஹாரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக சந்தேகம்படும்படி சென்ற ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் இளைஞர் சிறையிலிருந்து தப்பிவந்த கைதி ரகு என்பதும், கண்டியூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அவர் சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், ரகுவை கைது செய்து, தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் அதே இளைஞர் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com