அரசு மருத்துவமனையில் அனுமதித்த சிறிதுநேரத்தில் குழந்தை சாவு: உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம்,  திருத்துறைப்பூண்டி வெள்ளாளத்தெருவைச் சேர்ந்தவர்கள் அலிம்பாட்சா- சர்மிளாபானு. இவர்கள் தங்களுடைய ஒரு வயது குழந்தை சபரினாபானுவுடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சர்மிளாபானுவின் தந்தையை பார்க்க வியாழக்கிழமை காலை வந்தனர்.
அங்கு மதியம் 12 மணியளவில் சபரினாபானுவுக்கு சளி தொல்லை அதிகமாகியதால்,  குழந்தையை உள்நோயாளியாக அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் அனுமதித்தனர். சிறிது நேரத்தில் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டதாம். பிற்பகல் 2 மணியளவில் அந்த குழந்தை இறந்துவிட்டது.
குழந்தைக்கு தவறான சொட்டுமருந்தை கொடுத்ததாகவும் ,  அதற்கு காரணமான மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை முன் முற்றுகையில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் குடந்தை சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் முல்லைவளவன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் விவேகானந்தன், குடந்தை தமிழினி மற்றும் குழந்தையின் உறவினர்கள் திரண்டு,  குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து
போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர்,  குழந்தையின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சார்ஆட்சியர்  அலுவலகத்துக்கு  குழந்தையின் சடலத்தை எடுத்துக் கொண்டு அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அந்த நேரம் சார் ஆட்சியர்  அதிகாரிகளோடு கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இதனால்,  போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் வட்டாட்சியர் மாணிக்கராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.  
சார்ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வராததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள்,  சார்ஆட்சியரின் சேம்பருக்கு சென்றனர்.  
பின்னர், சார்ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், முறைப்படி புகார் அளித்தால் மருத்துவமனை பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com