சம்பா, தாளடி பயிருக்கு காப்பீடு செய்ய நவ. 30 கடைசி நாள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற் பயிருக்குக் காப்பீடு செய்ய கடைசி நாள் நவ. 30-ம் தேதி என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற் பயிருக்குக் காப்பீடு செய்ய கடைசி நாள் நவ. 30-ம் தேதி என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும்,  பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் 2017 - 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற் பயிரை பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   
இதன்படி,  நிகழாண்டில் மாவட்டத்தில் 874 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.
கடன் பெறா விவசாயிகள் மாவட்டத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறாக சம்பா பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் நவ. 30-ஆம் தேதி. எனவே,  விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதம் மட்டும் அதாவது ஏக்கருக்கு ரூ. 402 காப்பீட்டுக் கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது.     விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையைச் செலுத்திய பின்னர் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com