முடிவுக்கு வந்தது மாணவர்கள் உண்ணாவிரதம்: அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து நாளை முடிவு

நீட் தேர்வுக்கு எதிராக தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பினர் மேற்கொண்டு வந்த தொடர் உண்ணாவிரதப்

நீட் தேர்வுக்கு எதிராக தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளாகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பினர் மேற்கொண்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழ்நாட்டில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும், மத்திய பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இக்கூட்டமைப்பினர் செப். 10-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர்.
ஐந்தாவது நாளாக வியாழக்கிழமை தொடர்ந்த இப்போராட்டத்தை அனைந்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலர் சீ. தினேஷ் தொடக்கி வைத்தார். இதையடுத்து, மாணவப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திக் கொள்வது என்றும், போராட்டத்தை வேறு வடிவங்களில் கொண்டு செல்வது என்றும், சமூக நீதியைக் காக்கும் போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக தந்தை பெரியார் பிறந்த நாளான செப். 17-ஆம் தேதி பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க பெருந்திரளான மாணவர்களை திரட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாணவப் பிரதிநிதிகள் ஜே. பிரபாகரன், ஜான், அரவிந்த், பாரி மைந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிற்பகலில் இப்போராட்டத்தை எழுத்தாளர் பசு. கெளதமன் பழச்சாறு வழங்கி முடித்து வைத்தார். இதனிடையே, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அ. நல்லதுரை, சிபிஎம்எல் (மக்கள் விடுதலை) அருணாச்சலம், ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், மாவட்டத் துணைச் செயலர் துரை. மதிவாணன், எழுத்தாளர் செ. சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
மேலும், தஞ்சாவூர் ரயிலடியில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் பாரிமைந்தன் தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com