சென்னையில் நவ. 20-இல் மாநில சுயாட்சி மாநாடு: வைகோ

சென்னையில் நவ. 20-ஆம் தேதி பல்வேறு மாநிலத் தலைவர்களை அழைத்து மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படவுள்ளது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

சென்னையில் நவ. 20-ஆம் தேதி பல்வேறு மாநிலத் தலைவர்களை அழைத்து மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படவுள்ளது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 109-ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டில் அவர் மேலும் பேசியது:
நதி நீர் இணைப்புப் பற்றி எல்லோரும் பேசுகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்தில் 67 ஆண்டுகளில் நதி நீர் இணைப்பு தொடர்பாக மசோதா கொண்டு வந்தது நான் மட்டுமே. வடக்கே இருக்கும் நதிகளை தென்னகத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். இதை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஏற்றுக் கொண்டார். இப்போதும் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
மாநில சுயாட்சியை நசுக்க நினைக்கிறது மத்திய அரசு. மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசுப் பறித்துக் கொள்வதைச் சுட்டிக்காட்டி எழுதிய அண்ணா, மாநிலத்துக்கு அதிகாரம் வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தது நான் மட்டுமே. இதை பல தலைவர்கள் பாராட்டிப் பேசினர். அத்துடன் இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதன் விளைவுதான் நீட் தேர்வுக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
எனவே, மாநில சுயாட்சிக்காக வடகிழக்கு எல்லைப்புற மாநிலத் தலைவர்களைத் திரட்டுவேன். இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை அழைத்து வந்து சென்னையில் நவ. 20-ஆம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்தவுள்ளேன். இதில், ஜனநாயகம், மதச்சார்பற்றத்தன்மை, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைத் தமிழகத்துக்குள் வர விடக் கூடாது. தெலங்கானாவில் தனிமாநிலம் அமைப்பதற்காக 2 ஆண்டுகள் கடுமையாகப் போராடினர். இங்கு மாநிலத்தைக் காப்பாற்றுவதற்கு நாம் போராடியே ஆக வேண்டும். இதற்காக மக்களைத் திரட்டுவேன்.
தமிழக அரசு பாசிச நடவடிக்கைகளை கைவிட வேண்டும். குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தி உள்பட 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றார் வைகோ.
மாநாட்டுக்கு வழக்குரைஞர் கு. சின்னப்பா தலைமை வகித்தார். மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு. துரைசாமி, பொருளாளர் அ. கணேசமூர்த்தி, துணைப் பொதுச் செயலர்கள் துரை. பாலகிருஷ்ணன், மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே. மணி, செந்திலதிபன், அமைப்புச் செயலர் வந்தியதேவன், பொறியாளர் வே. ஈஸ்வரன், ஆடுதுறை இரா. முருகன், தஞ்சாவூர் மாவட்டச் செயலர் கோ. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com