தஞ்சை மதிமுக மாநாட்டில்திராவிட இயக்க லட்சியங்களை முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்பு

திராவிடப் பேரியக்க அடிப்படை லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வது என தஞ்சாவூரில் மதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணா 109ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டில்

திராவிடப் பேரியக்க அடிப்படை லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வது என தஞ்சாவூரில் மதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அண்ணா 109ஆவது பிறந்த நாள் விழா மாநாட்டில் உறுதியேற்கப்பட்டது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திராவிடப் பேரியக்கத்தின் அடிப்படை லட்சியங்களான சமூக நீதி, மொழி, இன, பண்பாட்டு உரிமைகள் பாதுகாப்பு, மதச்சார்பற்றத் தன்மை, மாநில சுயாட்சி போன்றவற்றை முன்னெடுத்துச் சென்றிடவும், தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும் இந்துத்துவக் கூட்டத்தின் முயற்சிகளை முறியடிக்க, அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டின் மூலம் மதிமுக உறுதியேற்கிறது.
திராவிட இயக்கம் போராடிப் பெற்றுத் தந்த சமூக நீதி உரிமையைத் தட்டிப் பறிக்கும் வகையில் பாஜக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. மருத்துவக் கல்வி பயில்வதற்கு தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டு இருப்பது அநீதி ஆகும். எனவே, மருத்துவப் படிப்புக்கு "நீட்' தேர்வு கட்டாயம் என்ற நிலையில் இருந்து தமிழகத்துக்கு முழுவிலக்கு அளிக்க வேண்டும். இதற்காக, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், வரலாறு காணாத போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகும்.
மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கல்வித் துறையைக் காவிமயமாக்கித் தனியாருக்குத் தாரை வார்த்து ஏகபோக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் மத்திய அரசிடம் இருந்து கல்வித் துறையை முழுமையாக மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அப்போதுதான் கல்வித் துறையில் மாநிலங்கள் தன்னாட்சியுடன் செயல்பட முடியும். தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி மரபு உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைத்திட உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும். தமிழக அரசு காவிரிப் பிரச்சினையில் மிகவும் கவனமாக நமது தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும். கர்நாடகம் காவிரியின் குறுக்கே எக்காரணம் கொண்டும் அணைகள் கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
வளம் கொழிக்கும் காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாலைவனமாக மாற்றும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மக்களின் எதிர்ப்பை மீறி இத்திட்டங்களைச் செயல்படுத்த முயன்றால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன், காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
அதிமுக அரசு உடனடியாக மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டவாறு உள்ளாட்சித் தேர்தலை நவ. 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com