53 ஏரிகளில் ரூ. 6.63 கோடியில் தூர்வாரும் பணி

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 53 சிறு பாசன ஏரிகளில் தூர்வாரும் பணி மற்றும் கரையைப் பலப்படுத்தும் பணி ரூ. 6.63 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 53 சிறு பாசன ஏரிகளில் தூர்வாரும் பணி மற்றும் கரையைப் பலப்படுத்தும் பணி ரூ. 6.63 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
பூதலூர் ஒன்றியம், செங்கிப்பட்டி புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ஆளடி ஏரி ரூ. 13.42 லட்சம் மதிப்பில் தூர்வாரி கரையைப் பலப்படுத்தும் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியர் பின்னர் தெரிவித்தது:
ஏரி, குளங்களைத் தூர்வாரி கரையைப் பலப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளதால், அதற்கு முன்பாகவே போர்க்கால அடிப்படையில் தூர்வாரி கரையைப் பலப்படுத்தி, நீர் பிடிப்புப் பகுதி அதிகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம், சுற்று வட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கு வழிவகுக்கும். இதனால் விவசாயம் செய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சாவூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 சிறு பாசன ஏரிகளும், பூதலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 28 சிறு பாசன ஏரிகளும், திருவோணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 பாசன ஏரிகளும் என 53 சிறு பாசன ஏரிகள் ரூ. 6 கோடியே 63 லட்சம் மதிப்பில் தூர்வாரி கரை பலப்படுத்தப்படுகிறது. மேலும், முட்புதர்கள் அகற்றுதல், மதகுகள் மற்றும் கலிங்குகள் கட்டுதல், சீரமைப்பு செய்து, சிறு பாசன ஏரிகளை முழு கொள்ளளவை மீட்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது என்றார் ஆட்சியர். ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறைச் செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com