தமிழகத்தில் உணவு பூங்கா அமைப்பது குறித்து ஆய்வு

தமிழகத்தில் உணவு பூங்கா அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் எஸ்.ஜே. சிரு.

தமிழகத்தில் உணவு பூங்கா அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் எஸ்.ஜே. சிரு.
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உணவு தொழில்நுட்பப் பொருள்காட்சியில் அரங்கத்தைத் திறந்து வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
உணவுப் பதப்படுத்துதல் மூலம் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட உணவு குறித்து நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்ய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உணவுப்பதப்படுத்துதல் தொழில்நுட்பம் சிறந்த முறையில் உள்ளது.
தமிழகத்தில் காய்கறிகள், பழங்களில் 30 சதவீதம் விரயமாகின்றன. எனவே, 10 மாவட்டங்களில் நபார்டு மூலம் ரூ. 390 கோடி செலவில் விநியோகத் தொடர் மேலாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாபெரும் உணவுப் பூங்கா அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பூங்கா ஓரிரு ஆண்டுகளில் அமைக்கப்படும் என்றார் சிரு.
மேலும், பொருள்காட்சியை நபார்டு முதன்மைப் பொது மேலாளர் எஸ்.என்.ஏ. ஜின்னா தொடக்கி வைத்தார்.
இந்தப் பொருள்காட்சியில் இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகத்தால் பயிற்றுவிக்கப்பட்டு உணவு தொழில் புரிந்து வரும் சுமார் 35 பேரின் அரங்குகள் அமைக்கப்பட்டன.
இதில், பார்வையாளர்களுக்கு உணவுப் பண்டங்களின் மாதிரிகள், உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த தொழில் தொடங்குவதற்கான பயிற்சி விவரங்கள், உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள், பல்வேறு அரசு உதவித் திட்டங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகத்தால் உருவாக்கப்பட்ட உணவு பொருள்களான தேங்காய் மூலம் தயாரிக்கப்பட்ட ஐஸ் கிரீம்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் கொண்டு செய்யப்பட்ட நியுட்ரி பார்கள், மிட்டாய் வகைகள் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டன.
இந்தப் பொருள்காட்சியைப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், பொதுமக்கள் என சுமார் 10,000-க்கும் அதிகமானோர் பார்வையிட்டதாக கழக இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com