63 கிராமங்களில் கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் விரைவில் கணக்கெடுப்பு

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 63 கிராமங்களில் கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 63 கிராமங்களில் கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சுயாட்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
மாவட்டத்திலுள்ள திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு, பூதலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 63 கிராமங்களில் கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் (கிராம சுயராஜ்ய அபியான் திட்டம்) வங்கியாளர்கள், எரிவாயு முகவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், வேளாண்மைத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அலுவலர்கள் கொண்ட குழு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. 
இக்குழுவினர் 63 கிராமங்களிலும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ளனர்.
இக்கிராமங்களில் 18 வயது நிறைவடைந்த அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனரா என்ற புள்ளி விவரம், வங்கி கணக்கு இல்லாத குடும்பத்திற்கு பூஜ்ய இருப்பு சேமிப்புக் வங்கி கணக்கைக் குழுவினர் தொடங்கித் தர வேண்டும். 
63 கிராமங்களில் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 50 கட்டணத்தில் ஒரு எல்.இ.டி. பல்பு பெற்றுக் கொள்ளலாம் என்பதை வீட்டின் உரிமையாளருக்குத் தெரிவிக்க வேண்டும். 
இதே எல்.இ.டி. பல்பு வெளிச் சந்தையில் வாங்கினால் இதன் முழு விலை ரூ.100. அரசு மானிய விலையில் வழங்கும் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
63 கிராமங்களிலும் ஒவ்வொரு குடும்பத்துக்கு இலவச எரிவாயு இணைப்பு உள்ளதா என்பதை எரிவாயு முகவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு முன் பண கட்டணம் இல்லாமல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவை உள்ளிட்ட பணிகளை மே 5-ம்  தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த 63 கிராமங்களிலும மத்திய அரசு திட்டம் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து இந்த தேசிய திட்டத்தில் தங்கள் பணியை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com