காவிரி விவகாரம்: போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தல்

காவிரி உரிமைப் போராட்டத்தில் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

காவிரி உரிமைப் போராட்டத்தில் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுமாறு இந்திய அரசை வலியுறுத்தியும், தனது சட்டக் கடமையை நிறைவேற்ற மறுக்கும் பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்தும் தமிழ்நாடெங்கும் மக்கள் பல வடிவங்களில் எழுச்சிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் சென்னையில் ஏப். 10-ம் தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைத் தள்ளி வைக்கக் கோரிய போராட்டமும், ஏப். 12-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டமும்,  காவிரி உரிமை மீட்புக் குழு உட்பட பல்வேறு கட்சிகள் - அமைப்புகளால் நடத்தப்பட்டன. ஆனால் ஏப். 10-ம் தேதி பேரணியில் வந்தவர்களைக் காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதுடன், அத்துமீறல் நிற்கவில்லை. நாம் தமிழர் கட்சித் தொண்டர்களின் வீடுகளில் சென்று காவல் துறையினர் இளைஞர்களைக் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பதும், துன்புறுத்துவதும் சிலரை சிறையில் தள்ளுவதும் அத்துமீறிய செயல். 
நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழர் விடுதலைக் கழகம் மற்றும் பல்வேறு தமிழ் இன உணர்வு மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலரும் காவிரி உரிமைப் போராட்டத்தையொட்டி இன்னும் தமிழ்நாடெங்கும் சிறைகளில் உள்ளனர்.  எனவே, தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்ட போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்து சுமூக நிலையை உண்டாக்க வேண்டும்.
வன்முறையில் ஈடுபடாத ரமேஷ்,  களஞ்சியம், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரை தாக்கி எலும்பு முறிவு ஏற்படுத்தியும், காயப்படுத்தியும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் கண்ணாடி இழைத்தடிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com