கடைமடைக்கு முறைவைக்காமல் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

பேராவூரணி, சேதுபாவாசத்திரம்  கடைமடைப் பகுதிகளுக்கு முறைவைக்காமல் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆட்சியரிடம்


பேராவூரணி, சேதுபாவாசத்திரம்  கடைமடைப் பகுதிகளுக்கு முறைவைக்காமல் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட கடைமடைப் பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
கடைமடைக்கு தடையின்றி தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தும்விதமாக, ஆண்டிக்காடு, எட்டிவயல், பூவாணம், பத்துக்காடு, நாடியம், பள்ளத்தூர், குருவிக்கரம்பை, நாடாகாடு, பெருமகளூர், பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்கால், பெரிய ஏரி உள்ளிட்ட இடங்களிலுள்ள ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்களையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கடைமடைப் பகுதிகளுக்கு விவசாயப் பணிகளுக்காக முறைவைக்காமல், கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஏரி, குளங்களை நிரப்பித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய அளவு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பதால், பேராவூரணி பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் எம்எல்ஏ மா. கோவிந்தராசு மற்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த ஆட்சியர், நிகழாண்டு போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும். தற்போது கல்லணையில் இருந்து பூதலூர் வரை சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பணிகள் நிறைவடைந்த பிறகு 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது 2,650 கனஅடி வீதமே திறக்கப்படுகிறது. இதை 3 ஆயிரம் அடியாக அதிகரித்தால் கரைகள் சேதமடையும் அபாயம் உள்ளது. மேலும், பேராவூரணி பெரியகுளம் ஏரி சரி செய்யப்படும். ஆனந்தவல்லி வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, வட்டாட்சியர் எல். பாஸ்கரன், ஒன்றிய ஆணையர்கள் பேராவூரணி குமரவடிவேல், சடையப்பன், சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராசு, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் பிரசன்னா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com