கொள்ளிடத்தைக் கண்காணிக்க 4 மண்டலக் குழுக்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிட ஆற்றங்கரையோரத்தைக் கண்காணிக்க 4 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்டக் கண்காணிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிட ஆற்றங்கரையோரத்தைக் கண்காணிக்க 4 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலருமான பிரதீப் யாதவ்.
கல்லணையில் வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
கல்லணைக்கு வரும் நீர் வரத்து மற்றும் வெளியேற்றப்படும் நீர் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.  மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
கல்லணை முதல் அணைக்கரை வரை கொள்ளிடம் ஆற்றுப்பகுதி நான்கு  மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குப் போதிய முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1.26 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாய், வெண்ணாறு மற்றும் காவிரி ஆறுகளில் அவற்றின் முழுக் கொள்ளளவுக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றார் பிரதீப் யாதவ்.
மேலும், கல்லணைக்கு வரும் தண்ணீர் அளவு குறித்தும், கல்லணையிலிருந்து கொள்ளிடம், கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, காவிரி ஆறுகளில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறித்தும், வெள்ள அபாயத்துக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுப் பணித் துறை அலுவலர்களிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.
அப்போது,  ஆட்சியர் ஆ. அண்ணாதுரை,  தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


ஆட்சியர் எச்சரிக்கை 
திருவையாறு அருகே கொள்ளிடக்கரையோரம் உள்ள வாணரங்குடி, மகாராஜபுரம், வடுகக்குடி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, புனவாசல், விளாங்குடி, அணைக்குடி ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் வெள்ள அபாயம் குறித்து மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை எச்சரிக்கை செய்தார். அப்போது அவர் பேசியது:
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரம் உள்ள பொதுமக்கள் மேடான பகுதிக்குச் செல்ல வேண்டும். மேலும், தண்ணீரை வேடிக்கை பார்ப்பதோ, ஆடு, மாடுகளைக் குளிப்பாட்டுவதோ, குளிப்பதோ செய்யக் கூடாது. கரையோரத்தில் நின்று சுயபடம் எடுக்கக் கூடாது. எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com