கொள்ளிடக் கரையோரக் கிராமங்களில் வடியாத வெள்ளம்

கொள்ளிடத்தில் உபரி நீர் வரத்து குறையாததால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் புகுந்த வெள்ளம்

கொள்ளிடத்தில் உபரி நீர் வரத்து குறையாததால் தஞ்சாவூர் மாவட்டத்தில் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் புகுந்த வெள்ளம் வடிய வழியில்லாததால், தொடர்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தேங்கி நின்றது.
முக்கொம்பிலிலிருந்தும், கல்லணையிலிருந்தும் கொள்ளிடத்தில் உபரி நீர் அதிக அளவில் திறந்துவிடப்படுகிறது. எனவே, கொள்ளிடத்தில் வினாடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் செல்வதாகக் கூறப்படுகிறது.
இதனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோரம் உள்ள திருவையாறு அருகேயுள்ள ஆச்சனூர், பாபநாசம் அருகேயுள்ள பட்டுக்குடி, கூடலூர், தட்டுமால், கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரை உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளிக்கிழமை தண்ணீர் புகுந்தது. 
இதனால், குடியிருப்புகளையும், பயிர்களையும், செங்கல் சூளைகளையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆனால், கொள்ளிடத்தில் உபரி நீர் வரத்து தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடிவதற்கு வாய்ப்பில்லாத நிலை உள்ளது. எனவே, குடியிருப்புகளையும், பயிர்களையும், செங்கல் சூளைகளையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் சூழ்ந்திருந்தது. 
இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே உள்ள தற்காலிக முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
மேலும், கும்பகோணம் அருகே குடிதாங்கி கிராமத்தில் கொள்ளிடக்கரையோரம் உள்ள 14 கூரை வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, 
அப்பகுதியில் அரசுப் பள்ளியில் தங்க வருவாய் துறையினர் ஏற்பாடு செய்தனர். 
இதனிடையே, கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதை விளாங்குடி - திருமானூர் பாலம், நீலத்தநல்லூர் பாலம், அணைக்கரை பாலங்களில் ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

40 குரங்குகள் மீட்பு
இந்நிலையில், கும்பகோணம் அருகே அய்யாநல்லூர் கொள்ளிடக்கரையோரம் உள்ள புங்கன்மரத்தில் 40-க்கும் அதிகமான குரங்குகள் இரு நாட்களுக்கும் மேலாக எங்கும் செல்ல முடியாமல் சிக்கி தவித்தது. கீழே தண்ணீர் சூழ்ந்திருந்ததால் குரங்குகளால் இறங்கி வர முடியவில்லை. தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மரத்துக்கும், கரைக்கும் இடையே மூங்கில் மரங்களை அமைத்தனர். அதன் வழியாக அனைத்து குரங்குகளும் கரைக்கு வந்தன.

வெள்ள நிவாரண உதவி அளிப்பு
பாபநாசம் ஒன்றியத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் இரா.துரைக்கண்ணு ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான  வசதிகளை செய்து தர உத்தரவிட்டுள்ளார்.மேலும்,   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினருக்கு  ஆறுதல் கூறி உடைகள், உணவு பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்கினார். மயிலாடுதுறை எம்.பி. ஆர்.கே. பாரதிமோகன், முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமார், முன்னாள் மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் எஸ்.மோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com