கஜா புயல்: 1.14 லட்சம் பேருக்கு சிகிச்சை

கஜா புயலுக்குப் பின்னர், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில்  1 லட் சத்து 14 ஆயிரத்து 464 பேருக்கு சிகிச்சை


கஜா புயலுக்குப் பின்னர், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில்  1 லட் சத்து 14 ஆயிரத்து 464 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மாவ ட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஐ. ரவீந்திரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில், புயலுக்கு பின் உள்ள நிலைமையை ஆய்வு செய்ய வந்த அவர் கூறியது: பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்புத் துறை உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் 46 மருத்துவக் குழுவினர் மூலம் பொதுமக்களுக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.
தஞ்சை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொற்று நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதித்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவசத்திரம், திருவோணம் ஆகிய 6 வட்டங்களில் உள்ள 36 ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் 123 துணை சுகாதார நிலையங்களில், மின் சாதனங்கள் வரவழைக்கப்பட்டு, மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரு சில இடங்களில் சீரமைப்புப் பணி தொடர்கிறது. புயலால் மின்தடை ஏற்பட்டதும், ஒரே வாரத்தில் 33 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், 5 கே.வி. ஜெனரேட்டர் வழங்கப்பட்டது.
தலா 4 பூச்சியியல் வல்லுநர்களைக் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழுநோய் தடுப்பு அலுவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு 3 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. புயல் பாதிக்காத மற்ற பகுதிகளிலும் தொற்றுநோய் பரவாமல் கண்காணிக்கப்படுகிறது. புயல் பாதிப்புக்கு பிறகு இதுவரை நடத்தப்பட்ட 2 ஆயிரத்து 74 மருத்துவ முகாம்கள் மூலம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 464 பொதுமக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேலும் சீரமைப்புப் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வந்து 31-க்கும் மேற்பட்ட மண்டபங்களில் தங்கியுள்ள மின்வாரிய பணியாளர்களுக்கு, தடுப்பூசி, மருத்துவச் சேவை வழங்கப்படுகிறது.
ஊராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் குளோரினேசன் செய்யப்பட்ட குடிதண்ணீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின்போது மாவட்ட திட்ட மேலாளர் எம். எட்வின், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் தீபக், உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் வி. சவுந்தரராஜன், பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் மு. பொன்னுச்சாமி, பேரூராட்சி தலைமை எழுத்தர் வி. சிவலிங்கம், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com