புயலால் பாதித்த செல்லிடப்பேசி கோபுரங்கள் விரைவாகச் சீரமைப்பு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செல்லிடப்பேசி கோபுரங்கள் விரைவாகச் சீரமைக்கப்பட்டன என்றார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினரும்,


புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செல்லிடப்பேசி கோபுரங்கள் விரைவாகச் சீரமைக்கப்பட்டன என்றார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினரும், தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழுவின் அவைத் தலைவருமான கு. பரசுராமன்.
பி.எஸ்.என்.எல். தஞ்சாவூர் தொலைத்தொடர்பு முதன்மைப் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது தொலைத்தொடர்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியது:
தஞ்சாவூர் கோட்டப் பகுதியில் மிக விரைவில் 4ஜி சேவை கிடைக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் முழு முயற்சி எடுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், கோடியக்கரை, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் புறநகர், திருவாரூர், நாகை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மல்லிப்பட்டினம், மன்னார்குடி ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மிக விரைவாகச் செல்லிடப்பேசி கோபுரங்களைச் சரி செய்தது. இதன் மூலம், மீண்டும் செல்லிடப்பேசி சேவை செயல்பாட்டில் உள்ளன.
மேலும், கோடியக்கரை, வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் தரை வழி, அகண்ட அலைவரிசை சேவை கிடைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற நிறுவனங்களிலிருந்து தஞ்சாவூர் கோட்டத்தில் மட்டும் 67,671 வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு வரவழைக்கப்பட்டனர். சிறந்த அலைவரிசை சேவை அளித்தும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.
பி.எஸ்.என்.எல். தஞ்சாவூர் முதன்மைப் பொது மேலாளர் சி.வி. வினோத், துணைப் பொது மேலாளர் ஆர். விவேகானந்தன், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ். இளங்கோ, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் வே. பன்னீர்செல்வம், கோ. ராஜ்மோகன், வை. அறிவழகன், த. நெல்சன், ராம. பாஸ்கரன், க. சுவாமிநாதன், ஜெ. இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com