தமிழ்ப் பல்கலை. ஆசிரியர் தேர்வில் முறைகேடு இல்லை: அமைச்சர் க. பாண்டியராஜன்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் தேர்வில் எந்தவித முறைகேடும் இல்லை என்றார் தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் தேர்வில் எந்தவித முறைகேடும் இல்லை என்றார் தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தேர்வில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகச் சிலர் புகார் எழுப்பி வரும் நிலையில் தஞ்சாவூருக்கு வந்த அமைச்சர் பாண்டியராஜனிடம் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் அளித்த பதில்:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆய்வு செய்தேன். எந்த முறைகேடும் கிடையாது. ஒரேயொரு பொறுப்பு மட்டும் நீதிமன்றத்தில் அத்துறையைச் சார்ந்தவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அப்பொறுப்புக்கு மறு விளம்பரம் செய்யப்படும்.
ஏற்கெனவே, ஆசிரியரல்லாத பணியாளர்கள் 23 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்ந்துள்ளனர். ஆசிரியர் பணிக்கு 450 பேரிடம் நேர்முகத் தேர்வு செய்யப்பட்டது. இவர்களுக்கு 10 பேர் கொண்ட குழு என்ன மதிப்பெண் கொடுத்தார்களோ, அதன்படிதான் நியமிக்கிறோம். மேலும், இடஒதுக்கீடு, அடிப்படை தகுதிகள், ஸ்லெட் உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. இதை நானே நேரில் ஆய்வு செய்தேன். 
இதுதொடர்பாக குறை கூறிய 4 பேரை அழைத்துப் பேசினேன். அவர்கள் சொன்ன பல கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. 
எந்தவித முறைகேடும் இல்லாத அளவுக்கு 20 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விரைவில் நியமன கடிதம் வழங்கப்படும் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com