முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தை பாதிக்கும்: அதிரையில் டிடிவி தினகரன் பேச்சு

மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கும் என்றார் ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி. தினகரன்.

மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கும் என்றார் ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி. தினகரன்.
தஞ்சாவூர் மாவட்டம்,  அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:  ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை தஞ்சை டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கெயில் திட்டம்,  மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றை வர விடாமல் தடுத்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் மறைவுக்குப் பிறகு இங்கே ஆட்சியில் இருப்பவர்கள் மத்திய அரசின் கிளை அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மத சார்பற்ற இந்திய துணைக் கண்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.  இதுபுரியாமல் மத்தியில் ஆள்பவர்கள் முத்தலாக் தடை சட்டத்தை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும். அதன்மூலம், பெரும்பான்மையின மக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என தப்புக்கணக்கு போடுகிறார்கள். 
முத்தலாக் தடை சட்டம்,  இஸ்லாமிய மக்களின் மதச் சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கும். மேலும், கிரிமினல் சட்டம் மூலம் யாரை வேண்டுமானாலும் 3 ஆண்டுகள் சிறையில் தள்ளலாம் என்கிற கடுமையான ஷரத்துக்கள் கொண்ட தேவையற்ற இந்த சட்டத்தை வலுக்கட்டாயமாக திணிக்கப் பார்ப்பது மிகவும் தவறானது.   
சிறுபான்மையின மக்களின் தோளோடு தோளாக  நின்று, சமுதாய நல்லிணக்கத்திற்காக, அனைவரும் ஒற்றுமையாக வாழ, என்றைக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்  என்றார் டிடிவி. தினகரன்.

ஒரத்தநாட்டில்...
ஒரத்தநாட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தினகரன் பேசியது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரத்தநாடு பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.  இப்பகுதியில் உள்ள சந்தை நவீன மயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முதல் கோரிக்கையாக நிறைவேற்றப்படும். 
மாவட்டத்தில் நிலவும் மீத்தேன் திட்டம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் திமுகதான் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும். ஆர்கே நகரில் வாய்ப்பு வழங்கியதுபோல் தமிழகம் முழுவதும் எங்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன். இப்பகுதியில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும். மேலும் இப்பகுதியில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரையும்,  மழை காலங்களில் காவிரியில் கிடைக்கும் உபரி நீரையும் சேமித்து வைத்தால் நாம் கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, எங்களுக்கு உங்களின் ஆதரவு என்றும் வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சிக்கு தினகரன் அணியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமை வகித்தார்.  ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சு.ஆசைத்தம்பி. ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் சிவ.ராஜேஸ்கண்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com