பணிவரன்முறைபடுத்த வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

பணிவரன்முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்களின் மாநில சம்மேளனம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.

பணிவரன்முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்களின் மாநில சம்மேளனம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிழமை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.
முன்னதாக, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து புறப்பட்ட பிரசார வாகனத்தை சிஐடியூ மாவட்ட செயலாளர் சி. ஜெயபால் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், சாலியமங்கலம், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, அய்யம்பேட்டை, தாராசுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தினர் வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டனர். 
இதில், டாஸ்மாக் ஊழியர்களின் பணியை வரைமுறைப்படுத்தி, காலமுறை ஊதியம், வாரவிடுமுறை, பண்டிகை விடுமுறை வழங்க வேண்டும். கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி பணிமூப்பு அடிப்படையில் தேவைப்படும் ஊழியர்கள், உபரி ஊழியர்கள் என வகைப்படுத்தி பணி வழங்க வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் சுழற்சி முறையிலான பணியிட மாற்றம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சிறப்பு பணப்பயன்களை வழங்கி, சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். பணிப்பதிவேடு, இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் தொழிலாளர் நலப்பிரிவை உருவாக்கிட வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் தொடர்ந்து வழங்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.
இதில் தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜெ. ரமேஷ்,  செயலாளர் க.வீரையன், பொருளாளர் க. மதியழகன், துணைத் தலைவர் திருவேங்கடம்,  துணைச் செயலாளர் எட்வின் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com