பேருந்து கட்டண உயர்வு சாமானிய மக்கள் மீதான தாக்குதல்: டிடிவி. தினகரன்

பேருந்து கட்டண உயர்வானது சாமானிய மக்கள் மீதான தமிழக அரசின் தாக்குதல் என்றார் ஆர். கே. நகர் எம்எல்ஏ டிடிவி. தினகரன்.

பேருந்து கட்டண உயர்வானது சாமானிய மக்கள் மீதான தமிழக அரசின் தாக்குதல் என்றார் ஆர். கே. நகர் எம்எல்ஏ டிடிவி. தினகரன்.
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணியில் செவ்வாய்க்கிழமை இரவு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தினகரன் மேலும் பேசியது:
தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது அதிமுக ஆட்சி அல்ல; பாஜகவின் கிளைக் கழக ஆட்சி மற்றும் போலி அதிமுக ஆட்சி.  ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களையெல்லாம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. 
அமைச்சர் ஒருவர்,  தினகரன் கூட்டத்திற்கு பேக்கேஜ் முறையில் பணம் கொடுத்து ஆள்களை அழைத்து வருகிறார்கள் என்று பேசுகிறார். பணம் கொடுத்து அழைத்து வரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. 90 சதவீத அதிமுகவினர் எங்களிடம்தான் உள்ளனர். மத்திய அரசிடம் பேசி டீசலுக்கான சுங்கவரியை குறைக்காமல் ஏழை, எளிய மக்கள் பயணிக்கும் அரசுப்பேருந்து கட்டணத்தை உயர்த்தி சாமானிய மக்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தி வருகின்றனர். 
எங்கள் அணி ஆட்சிக்கு வந்தால் தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு காவிரி நீருக்காக கர்நாடகாவை நம்பி இருக்காமல் நீர் ஆதாரங்களை பெருக்குவோம். பேராவூரணி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான நீதிமன்றம் அமைப்பது,  தென்னை சார்ந்த தொழிற்சாலை ஏற்படுத்துவது, காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம்,  பேராவூரணி அருகே உள்ள அம்மையாண்டியில் 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்டிக்குளம் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.
கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் பண்ணவயல் சு.பாஸ்கர்,  பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு,  தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மா. சேகர்,  சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் அஸ்வினிபார்த்தீபன்,  பேராவூரணி நகரச் செயலாளர் எஸ். பாண்டியராஜன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

மத்திய அரசு மீது  தமிழக மக்கள் அதிருப்தி
மத்திய அரசு மீது தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார் ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டிடிவி. தினகரன்.
 தஞ்சாவூரில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நான் நடத்திய 8 நாள் சுற்றுப்பயணம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆர்கே நகர் தொகுதி தேர்தலின்போது,  மக்கள் வரவேற்பு எப்படி இருந்ததோ அப்படியே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் மக்கள் ஆதரவு உள்ளது. 
வருங்கால தேர்தல் இதை உணர்த்தும்.  அடுத்ததாக விழுப்புரம் மாவட்டத்திற்கு மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். 
 ஊழல் இல்லாத ஆட்சி என்று மத்தியில் ஆள்பவர்களும், மாநிலத்தில் ஆள்பவர்களும் கூறி வருகின்றனர். ஆனால்,  அனைத்து இடங்களிலும் ஊழல் பிரவாகமாக ஓடுகிறது. அதனால்தான், மத்திய அரசு மீது தமிழக மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் அரசாங்கம் இருப்பதாகவே மக்கள் நினைக்கவில்லை.
 அமைச்சர் ஜெயக்குமார் பெரியார் மண் என்று கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு,  இத்தனை நாள் அவருக்கு தெரியவில்லையா? பாஜகவின் ஆலோசனையை கேட்டு அதிமுகவின் பொதுச்செயலாளரையே மாற்ற வேண்டும் என்று பேசியவர் அவர்.
ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறிக்கொள்ளும் இவர்கள், ஜெயலலிதா எதிர்த்த ஓஎன்ஜிசி திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்?. பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டும் பணியை தமிழக அரசு மேற்கொள்கிறது என்றார் டிடிவி. தினகரன்.
இந்த சந்திப்பின்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரெங்கசாமி, மனோகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 முன்னதாக, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் டிடிவி. தினகரன் பங்கேற்றுப் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com