ஒன்றிய அலுவலகத்தில் விவசாயத் தொழிலாளர்கள் மனு அளிப்பு

கழிப்பறைக் கட்டும் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறி விசாரணை நடத்த வலியுறுத்தி தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர்

கழிப்பறைக் கட்டும் திட்டத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாகக் கூறி விசாரணை நடத்த வலியுறுத்தி தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) திங்கள்கிழமை மனு அளிக்கும் இயக்கத்தை நடத்தினர்.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். வேலை கேட்கும் அனைவருக்கும் நிபந்தனை இன்றி வேலை வழங்க வேண்டும்.
சட்டக்கூலியைக் குறைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
மற்றொரு மனுவில், நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் தனிநபர் கழிப்பறைக் கட்டும் திட்டத்தின் கீழ் ஏராளமான பயனாளிகள் தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து, கழிப்பறைக் கட்டியுள்ளனர். கழிப்பறைக் கட்டும் திட்டத்துக்கு ரூ. 12,500 கிடைக்கும் என அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பயனாளிகள் சிலருக்கு பாதித்தொகை மட்டும் கிடைத்துள்ளது.
பலருக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை முறையிட்டும், பணம் கிடைக்கவில்லை. இதில், ஊராட்சி நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த இயக்கத்துக்கு சிஐடியு மாவட்டத் துணைச் செயலர் பி.என். பேர்நீதி ஆழ்வார் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி ஒன்றியச் செயலர் எம். மாலதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். வாசு, ஒன்றியச் செயலர் கே. அபிமன்னன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே. அன்பு, சுரேஷ், மாதர் சங்க ஒன்றியச் செயலர் டி. வசந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com