பிப். 26-இல் போராட்டம்: திருவோணம் விவசாயிகள் முடிவு

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 26ஆம் தேதி திருவோணம் வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கத்தினர்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 26ஆம் தேதி திருவோணம் வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இந்தச் சங்கத்தின் ஒன்றியக்குழு கூட்டம் திங்கள்கிழமை சிவவிடுதியில் சங்கத் தலைவர் ஆர். ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர் வி.கே.சின்னத்துரை, துணைத் தலைவர்கள் எம்.பி. செல்லத்துரை, கே.ஆர்.ராமசாமி, துணை செயலாளர் வ.பெ.தங்கராசு, செயற்குழு உறுப்பினர்கள் சி.ஆர்.அன்பழகன், எம்.பெரியசாமி, வி.எஸ்.வீரப்பன், துரை.முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 2016-17-க்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டு சம்பா சாகுபடியில் தண்ணீர் இல்லாததால் பல இடங்களிலும் பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட துறை மூலம் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வறட்சி நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.
நடப்பாண்டு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் மானியம் வழங்கியுள்ளது. ஆனால் அரசு அறிவித்தப்படி தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் கிடைக்க வில்லை. எனவே அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இன்றி உரிய மானியம், இடுப்பொருள்கள் கிடைத்திட மாவட்ட வேளாண்மை துறை நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட கோரிக்கைகளை நிவர்த்தி செய்துதர வலியுறுத்தி, பிப்ரவரி 26ஆம் தேதி
திருவோணம் வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com