தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  நவீன சிடி ஸ்கேன் மையங்கள் விரைவில் திறப்பு

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு நவீன சிடி ஸ்கேன் மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு நவீன சிடி ஸ்கேன் மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
திருச்சி,  திருவாரூர்,  நாகப்பட்டினம்,  அரியலூர்,  பெரம்பலூர்,  புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் 3,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும்,  1,000-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் மையங்கள் உள்ளன. 
இங்குள்ள ஒரே ஒரு சிடி ஸ்கேன் மையத்தில் தினம்தோறும் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் நாள்கணக்கில் காத்திருந்து,  ஸ்கேன் எடுத்துச் செல்கின்றனர். இதனால் நோயாளிகளின் காத்திருப்பு நேரம் அதிகரித்து, உடனுக்குடன் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. மேலும்,  இருக்கும் ஸ்கேன் கருவியும் பழைய முறையில் உள்ளதால், நவீன சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தது.
இதனை மேற்கோள்காட்டி மருத்துவமனை நிர்வாகம் அரசுக்கு அனுப்பிய கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு,  தமிழக அரசு இரண்டு நவீன சிடி ஸ்கேன் கருவிகளை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. இவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். ஜெயக்குமார்,  நுண்கதிர்துறை தலைவர்  டாக்டர் ஏ. சீனிவாசன் ஆகியோர் கூறியது:
 தலைக்காயம், வலிப்பு நோய், மூளையில் கட்டி, மூளை சம்பந்தப்பட்ட இதர பிரச்னைகள், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய்கள், விபத்தில் கை, கால் உடைதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தேவைப்படின் சிடி ஸ்கேன் எடுத்து அதிநவீன சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் உள்ள சிடி ஸ்கேனால் நோயாளிகளுக்கு அதிவிரைவாக பரிசோதனை அறிக்கையை வழங்க முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு, நாங்கள் அனுப்பிய கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ. 3.42 கோடி மதிப்பிலான இரண்டு நவீன சிடி ஸ்கேன் கருவிகளை வழங்கியுள்ளது. இக்கருவிகள் ஏற்கெனவே இருக்கும் சிடி ஸ்கேன் மையத்துக்கு அருகில் இருக்கும் இடத்தில் தனித்தனியாக  பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். இவை மூலம் ஏற்கெனவே இருந்த சிடி ஸ்கேன் கருவியை விட  விரைவாகவும், துல்லியமாகவும் நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்க முடியும். இதன் மூலம் அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிடி ஸ்கேன் எடுத்து, விரைந்து அதிநவீன சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
இதே ஸ்கேனை தனியார் மருத்துவமனையில் எடுத்தால் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வசூலிக்கின்றனர். ஆனால் அரசு மருத்துவமனையில் கருவியின் பராமரிப்புச் செலவுக்காக ரூ.500-ம்,  மருந்து செலுத்தி ஸ்கேன் எடுத்தால் கூடுதலாக ரூ.300 ம் மட்டுமே வசூலிக்கப்பட்டு, சிறந்த சேவை வழங்கப்பட உள்ளது என்றனர் அவர்கள்.

கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின்படி, 2 பேராசிரியர்கள் உள்பட 6 மருத்துவர்கள் தேவையாக உள்ளது. இதேபோல, 7 தொழில்நுட்ப உதவியாளர்கள் பணியிடங்களும் புதிதாக நிரப்பப்பட வேண்டும். மேற்கண்ட பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே புதிதாக வந்துள்ள சிடி ஸ்கேன் கருவிகளை தொய்வில்லாமல் இயக்க முடியும் என மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com