தஞ்சாவூரில்  மண்டல போக்குவரத்து துணை ஆணையர்  அலுவலகத்தில் ரூ.2.77 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூர் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த ரூ.2.77 லட்சம் லஞ்சப் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். 

தஞ்சாவூர் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த ரூ.2.77 லட்சம் லஞ்சப் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர். 
 திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மாடியில் தஞ்சாவூர் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகம் உள்ளது.
 இங்கு மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலிருந்து கணிசமான தொகை லஞ்சமாக போக்குவரத்து மண்டல துணை ஆணையர் அலுவலகத்துக்கு வழங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
 இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் ராம்தாஸ் தலைமையிலான தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை  போலீஸாரும், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் இன்னாசிமுத்து தலைமையிலான அலுவலர்களும் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் அலுவலக வாயிலில் காத்திருந்தனர்.
அப்போது, ஆய்வுக்கூட்டம் முடிந்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெளியே வந்தனர். அப்போது, கட்டுக் கட்டாக பணத்துடன் வெளியே வந்த சங்கிலிமுத்து (47) என்பவரைப் பிடித்து விசாரித்தனர்.  இதில் அவர், அருகில் உள்ள தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருபவர் என்பதும், தஞ்சாவூர் மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலிருந்து பொங்கல் பண்டிகை மாமூலாக வழங்கப்பட்ட ரூ.2.77 லட்சத்தை சேகரித்து, மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்கு வழங்குவதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. பணக் கட்டுகளின் மேல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், பணத்தை பறிமுதல் செய்ததுடன், வழக்குப் பதிந்து,  மாமூலாக வசூலிக்கப்பட்ட பணம் யாருக்காக வாங்கப்பட்டது, இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து சங்கிலிமுத்துவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com