விபத்துகளை குறைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்: ஐ.ஜி.

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை காவலர் பொங்கல் விழாவை தொடங்கி வைத்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி. வரதராஜு செய்தியாளர்களிடம் கூறியது:

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை காவலர் பொங்கல் விழாவை தொடங்கி வைத்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி. வரதராஜு செய்தியாளர்களிடம் கூறியது:
போலீஸ், பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளன. இதன் மூலம் போலீஸ், பொதுமக்களிடையே இணக்கமான சூழல் உருவாகி வருகிறது.
நாங்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் விளைவால் மத்திய மண்டலத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2017-ஆம் ஆண்டில் விபத்துகளினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது.  2016-இல் விபத்துகளில் 2,615 பேர் இறந்துள்ள நிலையில், 2017-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2, 363-ஆக குறைந்துள்ளது. மேலும், விபத்துகளை குறைக்க அதிவேகமாக செல்வோர், சாலை விதிகளை மீறுவோர், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், சீட் பெல்ட் அணியாதோர், தலைக்கவசம் அணியாதோர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் காரணமாக 2017-ஆம் ஆண்டில் மட்டும் 3.20 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இத்தகைய நடவடிக்கைகளை தீவிரமாக்கி, விபத்துகளை கணிசமாகக் குறைக்க முயற்சிப்போம்.
 மத்திய மண்டலத்தில் 2015-இல் 234 கொலைகளும், 2016-இல் 235 கொலைகளும் நடந்துள்ள நிலையில், 2017-ஆம் ஆண்டு 214 கொலைகள் நடந்துள்ளன. இதே போல, 2016-இல் 313 திருட்டு சம்பவங்களும், 2017-இல் 286 திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. இதன் மூலம் கொலைக் குற்றங்களும், திருட்டுகளும் குறைந்துள்ளது தெரிகிறது. ரூ.5.50 கோடி அளவிலான திருட்டுப் பொருள்கள் மீட்கப்பட்டு, பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டு கடும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 260 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளோம்.
குற்றங்களை மேலும் குறைக்க நாங்கள் அதிகளவில் இருசக்கர வாகன ரோந்துப் பணிகள், அதிகமான வாகனத்தணிக்கைகளையும், பழங்குற்றவாளிகள் தீவிரமாகக் கண்காணிப்பு, புதிய குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பது போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம் என்றார் ஐஜி வரதராஜு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com