வெளிநாட்டினர் கொண்டாடிய பொங்கல் விழா

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கலை ஆயம், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 75 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்குக் கொம்பு வாத்தியம் ஊதி, தமிழ் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு பொங்கல் வைக்கும் விதத்தை பார்வையிட்டனர். பொங்கல் பொங்கி வந்தபோது உள்ளூர் மக்களுடன் இணைந்து வெளிநாட்டுப் பயணிகளும் பொங்கலோ பொங்கல் என முழங்கினர்.
இதையடுத்து, நடைபெற்ற புலியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், கபடி போன்ற விளையாட்டுகளைக் கண்டுகளித்தனர். மேலும், இளவட்டக் கல்லை உள்ளூர் மக்களுடன் வெளிநாட்டுப் பயணி ஒருவர் தூக்கினார். பின்னர், உறியடித்தல் போட்டியில் கலந்து கொண்டு, பானையை உடைக்க முயன்றனர்.
மேலும், மேடையில் கரகாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பொய்க்கால் குதிரை, பச்சைக் காளி - பவளக்காளி ஆட்டம், தப்பாட்டம், சிலம்பக் கலை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கயிறு இழுத்தல் போட்டியில் உள்ளூர் மக்கள் ஒருபுறம் இழுக்க, மறுபுறம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இழுத்து வெற்றி பெற்றனர். கிராமச் சந்தைகளில் உள்ளது போல் அமைக்கப்பட்டிருந்த மண்பாண்டம் தயாரித்தல், கூடை முடைதல், ஜோதிடம் பார்த்தல் போன்றவற்றை பார்த்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வியப்படைந்தனர்.
இந்த விழாவில் பங்கேற்ற அனுபவம் குறித்து அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தைச் சேர்ந்த வில்லியம் கைகர் தெரிவித்தது:
எனக்கு மிகவும் பிடித்த தஞ்சாவூருக்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருகிறேன். இங்குள்ள மக்கள் நட்புடன் பழகுகின்றனர். எங்களது ஊரில் அறுவடை திருவிழா நடைபெறும். ஆனால், இதுபோன்ற கொண்டாட்டங்கள் அங்கு இல்லை. பானையில் பொங்கல் வைப்பது, கரும்பு சுவைப்பது போன்றவற்றை இங்குதான் பார்க்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் இவ்விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
இதேபோல், மற்றொரு அமெரிக்கரான ராபர்ட் கூறுகையில், "இப்போதுதான் தஞ்சாவூருக்கு முதல் முறையாக வருகிறேன். வித்தியாசமான முறையில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றாக இருக்கிறது' என்றார்.
விழாவில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், கலை ஆயம் கெளரவச் செயலர் எஸ். முத்துக்குமார், மாவட்டச் சுற்றுலா அலுவலர் ஆர். ராஜசேகரன், மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர்கள் பி.ஜி. சங்கரநாராயணன், எம். சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com