முன்னாள் ஊராட்சித் தலைவர் சாவு: போலீஸாரைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் தொடர் போராட்டம்

தஞ்சாவூரில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இறப்புக்குக் காரணமான போலீஸாரைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள்,

தஞ்சாவூரில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இறப்புக்குக் காரணமான போலீஸாரைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், அமமுகவினர் இரண்டாம் நாளாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே பழவேரிக்காடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குமாரசெல்வம் (50). வழக்குத் தொடர்பான விசாரணைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) மதுக்கூர் போலீஸார் அழைத்துச் சென்றனர். அதன்பிறகு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை (ஜூலை 19) போலீஸாரால் சேர்க்கப்பட்ட குமாரசெல்வம் இறந்தார்.
இவரது இறப்புக்கு காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், அமமுகவினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, குமாரசெல்வத்தின் மனைவி மாலா அளித்த புகாரின் பேரில் மதுக்கூர் காவல் ஆய்வாளர் ஆனந்ததாண்டவன், உதவி ஆய்வாளர் மகேந்திரன், தலைமைக் காவலர் பெருமாள், அதிமுக மதுக்கூர் ஒன்றியச் செயலர் துரை.செந்தில் ஆகியோர் மீது மதுக்கூர் போலீஸாரால் வெள்ளிக்கிழமை வழக்குப் பதியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்ற நடுவர் ப்ரியா முன்னிலையில் குமாரசெல்வத்தின் சடலம் சனிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 4 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், அமமுகவினர் உடலை வாங்க மறுத்து, பிரேத பரிசோதனைக் கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்லிடப்பேசி மூலம் பேசியதைத் தொடர்ந்து, சடலத்தை வாங்கிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com