இழப்பீடு கோரி காப்பீட்டு நிறுவனத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

தஞ்சாவூரில் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி காப்பீட்டு நிறுவனத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூரில் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி காப்பீட்டு நிறுவனத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சாவூர் அண்ணா சாலையில் உள்ள நியு இந்தியா அசூரன்ஸ் நிறுவன வாயிலை முற்றுகையிட்டு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த சமவெளி விவசாயிகள் இயக்கத் தலைவர் சு. பழனிராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
பல மாவட்டங்களில் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையை நியு இந்தியா அசூரன்ஸ் நிறுவனம் இதுவரை வழங்கவில்லை. இதனால், ஏறத்தாழ 50 சதவீத விவசாயிகள் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காப்பீட்டுக் கழக மண்டல அலுவலரை ஒன்றரை மாதத்துக்கு முன்பு நேரில் சந்தித்து முறையிட்டும், இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டபோதும், இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 5,000 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. 
இதைக் கண்டித்தும், அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தியும் இந்த முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது. இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றார் பழனிராஜன்.
அப்போது,  விவசாயிகளிடம் நியு இந்தியா அசூரன்ஸ் நிறுவன உதவி மேலாளர் பாண்டியன் பேசுகையில், ஒரு மாதத்துக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். பின்னர், அவரிடம் ஒரு வாரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மனுக்கள் அளித்துவிட்டு, கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்,  தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன்,  தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. மணிமொழியன்,  விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com