குறுவை சாகுபடி குறித்து ஆலோசனை வழங்க வலியுறுத்தல்

நிகழாண்டு குறுவை சாகுபடி செய்யலாமா அல்லது வேறு பயிர் சாகுபடி செய்யலாமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை வழங்க வேண்டும் என தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை

நிகழாண்டு குறுவை சாகுபடி செய்யலாமா அல்லது வேறு பயிர் சாகுபடி செய்யலாமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை வழங்க வேண்டும் என தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: தனி அலுவலரை நியமித்து கூட்டுறவு சங்கம் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனி அலுவலர் இல்லாததால் உரம், பயிர் கடன் உள்ளிட்டவை விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.
மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் மனோகரன்: கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அன்னப்பன்பேட்டை எம். செல்வராஜ்: 2016 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட பயிர் காப்பீடு பெற பல போராட்டங்கள் நடத்தினோம். ஆனால், அன்னப்பன்பேட்டை தொடக்க வேளாண்மை வங்கி மூலம் 62.15 சதவீதம் கிடைக்க வேண்டிய தொகைக்குப் பதிலாக 21.78 சதவீதம் மட்டுமே கிடைத்தது. இதனால், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என்பது தெரியவில்லை. மழை வந்தால் தண்ணீர் தருவோம் என கர்நாடக முதல்வர் கூறினார். எனவே, குறுவை சாகுபடி செய்யலாமா? அல்லது சம்பா சாகுபடி நேரடியாக மேற்கொள்ளலாமா? என்பதை அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக கூட்டத்தை நடத்தி விவசாயிகள் என்னென்ன சாகுபடி மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும்.
அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்க வாய்ப்பில்லை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதனால், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையும், வருமானமும் இல்லை. எனவே, விவசாயிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ. 10,000 உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்குழாய் மூலம் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குக் கடந்த ஆண்டை போல சிறப்புக் குறுவை தொகுப்புத் திட்டத்தை நிகழாண்டும் முதல்வர் அறிவிக்க வேண்டும்.
பள்ளத்தூர் கே.ஏ. கூத்தலிங்கம்: கல்லணைக் கால்வாயில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை நகரில் உள்ள கழிவுகள் அனைத்தும் விடப்படுகின்றன. இதனால், கல்லணைக் கால்வாயில் கழிவு நீர்தான் இருக்கிறது. இதேபோல, ஊராட்சிகளில் தூய்மைப் பணியில் சேகரிக்கப்படும் கழிவுகளும் கல்லணைக் கால்வாயில் கொட்டப்படுகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலமேற்புரம் கோவிந்தராஜ்: காவிரியில் கல்லணைக்குக் கீழே 10 ஆண்டுகளாக மணல் குவாரி அமைக்கப்படவில்லை. இப்போது, திருக்காட்டுப்பள்ளி அருகே மணல் குவாரி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மணல் குவாரி அமைக்கப்பட்டால் அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் போய்விடும். விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்.
விவசாயிகள் வெளிநடப்பு
கூட்டத்தின் தொடக்கத்தில் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு வந்த விவசாயிகள், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி பொதுமக்களைப் படுகொலை செய்த காவல் துறையினரைக் கண்டித்தும், இதற்கு துணை போன முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர், சுமார் அரை மணிநேரம் வெளிநடப்பு
செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com