தஞ்சாவூர் மாவட்டத்தில் 70 இடங்களில் குடிமராமத்துப் பணிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 70 இடங்களில் சுமார் ரூ. 11 கோடி மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் பொதுப் பணித் துறையின் காவிரி வடிநிலக் கோட்டச் செயற் பொறியாளர் முகமது இக்பால்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 70 இடங்களில் சுமார் ரூ. 11 கோடி மதிப்பில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் பொதுப் பணித் துறையின் காவிரி வடிநிலக் கோட்டச் செயற் பொறியாளர் முகமது இக்பால்.
தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அவர் பேசியது:
நீர் நிலைகளில் குடி மராமத்துப் பணிகள் மேற்கொள்ளத் தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு வாரத்துக்குள் குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்படவுள்ளது. இதில், காவிரி வடிநிலக் கோட்டத்தில் 22 பணிகள் ரூ. 3.71 கோடி மதிப்பிலும், மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட ஆடுதுறையில் ரூ. 70 லட்சம் மதிப்பிலும், வெண்ணாறு கோட்டத்தில் 16 பணிகள் ரூ. 2.46 கோடி மதிப்பிலும், கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் 13 பணிகள் ரூ. 2.78 கோடி மதிப்பிலும், அக்னியாறு கோட்டத்தில் 11 பணிகள் ரூ. 1.41 கோடி மதிப்பிலும், ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் 4 பணிகள் ரூ. 56 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் சுமார் 70 பணிகள் ஏறத்தாழ ரூ. 11 கோடி மதிப்பில் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளன.
இப்பணிகள் அந்தந்த பகுதி விவசாய சங்கங்கள் மூலமாக மேற்கொள்ள முதல்வர் ஆணையிட்டுள்ளார். ஏற்கெனவே விவசாய சங்கங்கள் இருந்தால் அதன் மூலமும், அவ்வாறு இல்லாவிட்டால் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாய சங்கத்தை ஏற்படுத்தியும் செயல்படுத்தப்படும் என்றார் முகமது இக்பால்.
35,000 ஹெக்டேரில் குறுவை இலக்கு: மேலும், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஏ. மதியழகன் பேசியது:
மாவட்டத்தில் 35,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை முன்பட்ட குறுவை 11,900 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் சாகுபடிப் பணிகள் அதிகரிக்கும். இதற்காக ஆடுதுறை 43, கோ 51 ரக நெல் விதைகள் 107 டன்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆடுதுறை 5, வம்பன் 6 ரக உளுந்து விதைகள் 55 டன்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார் மதியழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com