நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் வரத்தைத் தடுக்க மின்னணு சாதனம் அறிமுகம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் வரத்தைத் தடுப்பதற்காக மின்னணு சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் வரத்தைத் தடுப்பதற்காக மின்னணு சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல்லை தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று நஷ்டமடைவதை தவிர்ப்பதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆனால், வெளி மாவட்டங்களில் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கும் வியாபாரிகள் டெல்டா மாவட்டங்களில் அரசு நிர்ணயிக்கும் விலைக்கு விற்று லாபம் ஈட்டுவதாகவும், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் இருந்து வருகின்றன. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து நெல் வரும்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவும் அதிகரிக்கிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் வறட்சி நிலவும்போது கூட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் அளவு அதிகமாக இருக்கிறது. இதனால், வறட்சி நிலைக்கும், நெல் கொள்முதல் அளவுக்கும் முரண்பாடு ஏற்படுகிறது.
இதுபோன்ற புகார்களைத் தவிர்ப்பதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மின்னணு ரசீது முறையைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 174 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்தச் சாதனம் அண்மையில் அமைக்கப்பட்டது. கையடக்கக் கணியுடன் கூடிய இச்சாதனத்தில் சிம் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. இதில், மின் இணைப்பு ஏதும் கிடையாது என்பதால், மின் தடையால் பாதிப்பு இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் தெரிவித்தது:
நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமையகத்தில் உள்ள 'சர்வரில்' விவசாயிகளின் தரவுகள் முழுவதும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கையடக்கக் கணினியுடன் கூடிய மின்னணு ரசீது சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. 
நிலையத்துக்கு நெல் கொண்டு வரும் விவசாயிகளின் பெயர், மாவட்டத்தில் அவருடைய நிலம் உள்ள பகுதியை இச்சாதனம் காண்பிக்கும். மேலும், இச்சாதனத்தில் விவசாயிகளின் ஆதார் எண், செல்லிடப்பேசி எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, வியாபாரிகள், வெளி மாவட்ட விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை இந்த மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாது. 
மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவு குறித்த விவரத்துடன் கூடிய ரசீது அச்சடிக்கப்பட்டு, வழங்கும் வசதியும் இச்சாதனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், கொள்முதல் செய்யப்பட்ட நெல் குறித்து தொடர்புடைய விவசாயினுடைய செல்லிடப்பேசிக்குக் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. விவசாயினுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட விவரமும், அவருடைய செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டுவிடுகிறது. எனவே, இனிமேல் வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லையும், வெளி மாவட்ட நெல்லையும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாது.
இதேபோல, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் முதல் கட்டமாக பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இச்சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, சம்பா அறுவடைப் பருவத்துக்குள் மற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் இச்சாதனம் கொண்டு வரப்படவுள்ளது என்றனர் அலுவலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com