கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில்...
கஜா புயல் அறிவிப்பைத் தொடர்ந்து புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுகை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசின் முதன்மை செயலருமான ஷம்பு கல்லோலிக்கர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  
கஜா புயல் அறிவிப்பைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புயல் வீசினால் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் 
பாதுகாப்பு மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை இடமாற்றம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்டவை தங்கும் இடங்களிலேயே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இரவு 8 மணி முதல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 586 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
மீட்டுப் பணிகளை மேற்கொள்ள 115 ஜேசிபி இயந்திரங்கள், டிராக்டர்களும் கடலோரப் பகுதியில் தயார்நிலையில் உள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றார். ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் எம். ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

தயார்நிலையில் 
மணல் மூட்டைகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை டவுன்ஹால் பகுதியில் மணல் மூட்டைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...
கஜா புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்டத்தில் கஜா புயலை எதிர்கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் கஜா புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு வியாழக்கிழமை பார்வையிட்டார். மேலும், அவசரகால மீட்புக் கருவிகள் உபகரணங்களையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர், பாபநாசம் காப்பன் தெருவில் உள்ள குடிசைப் பகுதிகளில் கஜா புயல் கரையைக் கடப்பது குறித்து எடுத்துரைத்து, பாதுகாப்பாக முகாம்களில் தங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். பாபநாசம், ராஜகிரியில் உயரமான மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.
இதேபோல, பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில் உள்ள பல்நோக்குப் புயல் பாதுகாப்பு மையத்தில் ஜெனரேட்டர் வசதி, மீட்புக் கருவிகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலருமான பிரதீப் யாதவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். மேலும், கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது,  ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தஞ்சாவூர் மாநகரில்
தஞ்சாவூர் மாநகரில் புயல் பாதிப்புகளைச் சமாளிப்பதற்காக பொக்லைன்,  மரம் அறுக்கும் இயந்திரங்களுடன் மாநகராட்சி பணியாளர்கள் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மேலும்,  மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க லாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மாநகரில் புயல் பாதுகாப்பு வழிமுறைகள், மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை என்ன? என்பது குறித்து ஒலிபெருக்கி மூலம் இரு வாகனங்களில் முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது. இவற்றை கோட்டாட்சியர் சி. சுரேஷ், வட்டாட்சியர் ப. அருணகிரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com