கொள்முதல் செய்ய மறுப்பதால் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குத் தட்டுப்பாடுக் காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுக்கப்படுவதை கண்டித்து தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் தமிழ்நாடு நுகர்பொருள் வாண


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குத் தட்டுப்பாடுக் காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுக்கப்படுவதை கண்டித்து தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலக வளாகத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் வியாழக்கிழமை நெல்லை கொட்டி போராட்டம் நடத்தினர்.
இதில், 25-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இப்போராட்டத்துக்குத் தலைமை வகித்த சங்கத்தின் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
தமிழக அரசால் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன்படி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், போதிய அளவுக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்படவில்லை. இதற்கான காரணம் கேட்டால், சாக்கு தட்டுப்பாடு எனக் கூறுகின்றனர்.
அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். அங்கு மழையில் நனைவதால், நெல் முளைக்கும் நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகளுக்குப் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நெல் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதற்குத் தமிழக அரசுத் துணை போகிறதோ என்ற சந்தேகம் நிலவுகிறது. நெல்லை அறுவடை செய்தபோது நன்றாக இருந்தது. இப்போது, கொள்முதல் நிலையத்தில் நனைந்துவிட்டதால் நெல்லில் ஈரப்பதம் அதிகமாகிவிட்டது. எனவே, எவ்வளவு ஈரப்பதமாக இருந்தாலும், அதை அரசுக் கொள்முதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார் விமல்நாதன்.
அலுவலர்கள் விளக்கம்: இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 5 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புதன்கிழமை 17 இடங்களிலும், வியாழக்கிழமை 50 இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டுக்கு 1.25 கோடி சாக்குகள் தேவை என அரசிடம் கேட்டுள்ளோம். மூன்று மாதங்களுக்கு 25 லட்சம் சாக்குகள் அனுப்புமாறு கோரியுள்ளோம். தற்போது 1 லட்சம் சாக்குகள் இருப்பு உள்ளது. மேலும், 5 லட்சம் சாக்குகள் மன்னார்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரியில் இருந்து ஓரிரு நாட்களில் 1.75 லட்சம் சாக்குகள் வர உள்ளன. கூட்டுறவுத் துறையில் இருந்தும் 1.50 லட்சம் சாக்குகள் வர உள்ளன. இவற்றைக் கொண்டு கொள்முதல் தடையின்றி நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com