தஞ்சை பெரியகோயில் சிலைகள் 2-ஆவது நாளாக ஆய்வு

தஞ்சை பெரியகோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகளின் தொன்மைத் தன்மை குறித்து சிலை கடத்தல்

தஞ்சை பெரியகோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகளின் தொன்மைத் தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், தொல்லியல் துறை அலுவலர்கள் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஆய்வு செய்தனர்.
தஞ்சை பெரியகோயிலில் இருந்து 60 ஆண்டுக்கு முன் மாயமான ராஜராஜசோழன்,  லோகமாதேவி சிலைகளை குஜராத்திலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மே 29 ஆம் தேதி மீட்டுக் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, பெரியகோயிலில் உள்ள மேலும் சில சிலைகள் திருடு போயிருப்பதும், சில சிலைகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புகார்கள் வந்தன.  
இந்நிலையில் இக்கோயிலில் உள்ள ஐம்பொன் சிலைகளின் தொன்மைத் தன்மை குறித்து செப். 29-ம் தேதியும், அக். 11 ஆம் தேதியும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அக். 20 (சனிக்கிழமை) ஐம்பொன் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக அர்த்த மண்டபத்தில் உள்ள 41 சிலைகள் முருகன் சன்னதி முன் உள்ள ராஜா மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதேபோல, புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உள்ள 19 சிலைகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2-ஆவது நாளாக தஞ்சை பெரியகோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்,ஷ்ர தொல்லியல் துறை அதிகாரிகள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். காலை 7 மணிக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீஸாரும், இந்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குநர் எம். நம்பிராஜன் தலைமையில் தொல்லியல் துறையினரும் தஞ்சை பெரிய கோயில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்த சிலைகளை எடுத்து, அங்கேயே வைத்து 9 மணி வரை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடித்த பிறகு,  திருவாரூர் புறப்பட்டுச் சென்றனர்.
ஆய்வுக்குப் பிறகு இந்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குநர் எம். நம்பிராஜன் கூறியது:
தஞ்சை பெரியகோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்களில் உள்ள ஐம்பொன் சிலைகள் அதி நவீன கருவிகளை கொண்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது. சனிக்கிழமை தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 41 சிலைகளில் 38 சிலைகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 3 சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு வரை 19 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டன. மேற்கண்ட ஆய்வு முடிவுகளின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com