பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு: 12 இடங்களில் சாலை மறியல் - 548 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை 12 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 548 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை 12 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 548 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார், திமுக மாவட்டச் செயலரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், திராவிடர் கழகப் பொதுச் செயலர் இரா. ஜெயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலர் சொக்கா ரவி, ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், சிஐடியு மாவட்டத் துணைச் செயலர் கே. அன்பு, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் கோ. ராகவேந்திரதாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் சாமி. நடராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இப்போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 125 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, அம்மாபேட்டை, திருவோணம் உள்பட 12 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 38 பெண்கள் உள்பட 548 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூதலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  காங்கிரஸ் வட்டாரத் தலைவர் அறிவழகன் தலைமையிலான 17 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மெலட்டூர், மதுக்கூர், பேராவூரணி, கும்பகோணம் ஆகிய 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
40 சதவீதக் கடைகள் அடைப்பு: தஞ்சாவூர் காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், ரயிலடி ஆகிய இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.  மாவட்டத்தில் ஏறத்தாழ 40 சதவீதக் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. இதேபோல, பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள் எப்போதும்போல செயல்பட்டன.
வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்பு: தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் என். சதாசிவம் தலைமையில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணியிலிருந்து திங்கள்கிழமை விலகி இருந்தனர். இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 1,200-க்கும் அதிகமான வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணியைப் புறக்கணித்தனர்.
கல் வீச்சு: அய்யம்பேட்டை அருகே கீழவழுத்தூர் கிராமத்தில் திங்கள்கிழமை பிற்பகல் சிதம்பரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கல் வீசினர். இதில், பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி சேதமடைந்தது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் எந்தவித அசம்பாதவித சம்பவங்களும் இன்றி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.


கும்பகோணத்தில்...
கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  சிஐடியூ சார்பில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட்  மற்றும் ஏஐடியூசி சார்பில் தலைமை அஞ்சலக சாலை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மு.அ. பாரதி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்டத் தலைவர் டிஆர். லோகநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மாவட்ட செயலாளர் சு. கல்யாணந்தரம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


மாவட்டத்தின் பிற பகுதிகளில்...
பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்:  பேராவூரணி ஆவணம் சாலை பெரியார்சிலை அருகே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு  முன்னாள் பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார் (திமுக) தலைமை வகித்தார்.
ஒரத்தநாட்டில்...  ஒரத்தநாடு அருகே தென்னமநாடு பைபாஸ்  சாலை அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மு.காந்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராசு,  காங்கிரஸ் வட்டார தலைவர் சதாசிவம்,  காங்கிரஸ்  விவசாய சங்க மாநில செயலாளர் செந்தில்,  சிபிஐ ஒன்றிய செயலாளர் சீனி.முருகையன், சிபிஎம் ஒன்றிய செயலாளர்  ,சுரேஷ்குமார்,  மதிமுக மாவட்ட துணைத்தலைவர் மணிவண்ணன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். 
தென்னமநாடு பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸார்  அழைத்து வந்தனர். அப்போது  பேரணியாக வந்து ஒரத்தநாடு அண்ணாசிலை அருகே மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பின்னர் மறியலில் ஈடுபட்ட 80 பேரை கைது செய்தனர். 
ஊரணிபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக் குழு உறுப்பினர் டி.எஸ். ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீஸார் கைது செய்தனர். 
பாபநாசத்தில்.... கடைவீதியில் தஞ்சாவூர் கும்பகோணம் பிரதான சாலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நடைபெற்ற 
மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.எம். காதர் உசேன்,  ஏஐடியூசி மாவட்ட தலைவர்ஆர்.தில்லைவனம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30 ஆண்கள் 15 பெண்கள் உள்ளிட்ட 45 பேரை போலீஸார் கைது செய்தனர். 
அம்மாபேட்டையில்... நால்ரோடு பகுதியில் தஞ்சாவூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற விவசாய தொழிலாளர்  சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் உள்ளிட்ட 31 பேரை போலீஸார் கைது செய்தனர். கபிஸ்தலத்தில் கடைகளை மூட கூறிய திமுக மற்றும் அதன்தோழமை கட்சிகளை சேர்ந்த 26 பேரை போலீஸார் கைது செய்தனர். மெலட்டூர் கடைவிதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் துரைராஜன் தலைமையில் தஞ்சாவூர் திருக்கருகாவூர் பிரதான சாலையில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 21 பேர் கலந்து கொண்டனர். 
பட்டுக்கோட்டையில்...  பட்டுக்கோட்டையில் காலை முதல் முற்பகல் 11 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.  மாலையில் பட்டுக்கோட்டை  காந்தி  சிலை  அருகில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் ஏ.ஆர்.எம். யோகானந்தம் (காங்கிரஸ்), முன்னாள் எம்எல்ஏ கா. அண்ணாதுரை, ந.மணிமுத்து (திமுக),  பா.பாலசுந்தரம் ( இந்திய கம்யூனிஸ்ட்), ஏ.கே.குமார் (தமாகா), வி.எம்.பாண்டியராஜன் (அமமுக),  சி.சக்கரவர்த்தி (விடுதலைச் சிறுத்தைகள்), கே.ராவுத்தர்ஷா (மனித நேய  ஜனநாயக கட்சி) உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். அதிராம்பட்டினம் நகரில் காலை முதல் மாலை 4 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com