குடந்தை, பட்டுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை மாலை பலத்த போலீஸ்

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு,  காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணம் நகரம் மற்றும் பட்டீஸ்வரம், சுவாமிமலை, தாராசுரம், செட்டிமண்டபம் ஆகிய பகுதிகளில் இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாஜக, விஸ்வரூப விநாயகர் குழு உள்ளிட்ட இந்து அமைப்புகளின் சார்பில் கடந்த 10 ஆம் தேதி முதல் 68 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இச்சிலைகளுக்கு தினமும் காலை, மாலை இருவேளையும் பூஜைகள் நடைபெற்றது. 
விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை மாலையில் நிறைவடைந்ததும், அன்று மாலையே நீர்நிலைகளுக்கு அருகிலிருந்த 26 சிலைகள் ஆங்காங்கே விசர்ஜனம் செய்யப்பட்டன. தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை கும்பகோணம் நகரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 42 விநாயகர் சிலைகள் சரக்கு ஆட்டோ,  டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் மின்விளங்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மாலையில் அந்தந்த இடங்களிலிருந்து புறப்பட்டு, ஊர்வலம் புறப்படும் இடமான மகாமக குளம் அருகே வந்தடைந்தன.
அங்கிருந்து, மங்கள இசை, தாரை தப்பட்டை, பேண்டு வாத்தியங்கள், கேரள தையல் மற்றும் சிங்காரி மேளம் உள்ளிட்டவை முழங்க அனைத்து விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலம் கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையம், நாகேஸ்வரன் கோயில் கீழவீதி, வடக்குவீதி, உச்சிபிள்ளையார்கோயில், சாரங்கபாணி தெற்குவீதி,  பெரியபள்ளிவாசல் அமைந்துள்ள தேரோடும் வீதி, ராமசுவாமி கோயில் சன்னதி, பெரிய தெரு, டிஎஸ்ஆர் பெரிய தெரு, காந்தி பூங்கா, மடத்துத் தெரு வழியாக பாலக்கரை காவிரி ஆறு பகவத் படித்துறை மற்றும் டபீர் படித்துறைக்கு கொண்டு வரப்பட்டன. 
அங்கு அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்விக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நீரில் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக உதவி ஆட்சியர் பிரதீப்குமார் மேற்பார்வையில், கும்பகோணம் டிஎஸ்பி. கணேசமூர்த்தி தலைமையில் ஆயுதப்படை, அதிவிரைவுப்படையினர் உள்ளிட்ட சுமார் 300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விநாயகர் ஊர்வலத்தையொட்டி  ஊர்வலம் சென்ற பாதையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com