அக். 4-இல் தற்செயல் விடுப்பு போராட்டம்: நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கம் முடிவு

நெடுஞ்சாலைத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும்


நெடுஞ்சாலைத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அக். 4-ம் தேதி தற்செயல் விடுப்பு எடுப்பது என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சாலைப் பராமரிப்பு பணிகளைத் தனியாருக்கு வழங்காமல், நெடுஞ்சாலைத் துறையிடமே ஒப்படைக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறையில் மறு சீரமைப்பு செய்தபோது தேசிய நெடுஞ்சாலை, நபார்டு மற்றும் கிராமச் சாலை திட்டங்கள், ஆய்வு மற்றும் வடிவமைப்பு, சாலை மேம்பாட்டுத் திட்டம், மாநகரச் சாலைகள் போன்ற வட்டங்களில் பறிக்கப்பட்ட கண்காணிப்பாளர் பணியிடத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். தற்போது புதிதாக உருவாக்கப்பட உள்ள சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை வட்டங்களில் கண்காணிப்பாளர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரியும் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறைப் பணியாளர்கள் அக். 4-ம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது, நவ. 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. முத்துகுமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஆர். பன்னீர்செல்வம், பொதுச் செயலர் ஏ. ரெங்கசாமி, பொருளாளர் பி. பச்சைமுத்து, துணைத் தலைவர் சி. சிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com