ஆழ்துளை கிணறு தோண்டுவதாகக் கூறி மீத்தேன் ஆய்வு பணியா? மக்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில் மீத்தேன் எடுக்க ஆழ்துளை கிணறு அமைப்பதாகக் கருதி, அப்பணியை கிராம மக்கள் சனிக்கிழமை தடுத்து


கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில் மீத்தேன் எடுக்க ஆழ்துளை கிணறு அமைப்பதாகக் கருதி, அப்பணியை கிராம மக்கள் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
கும்பகோணம் அருகே உள்ள துக்காச்சி கிராமத்தில் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனருகே கடந்த சில நாள்களாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதை இப்பகுதி மக்கள் பள்ளியின் குடிநீர் உபயோகத்திற்காகத்தான் அமைப்பதாக கருதி இருந்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை 10 அங்குலம் அளவு கொண்ட இரும்புக் குழாய்கள் அதிகளவில் வந்து இறங்கியதால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே, கிராமமக்கள் அங்கு சென்று பார்வையிட்டபோது, அங்கு அலுவலர்கள் சிலர் மண் ஆய்வில் ஈடுபட்டதும், 5 அடிக்கு ஒருமுறை மண் எடுத்து ஆய்வு செய்ததும் தெரியவந்தது. பொதுமக்கள், ஆய்வில் ஈடுபட்டவர்களிடம், மண் ஆய்வு எதற்காக எனக் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நிலத்தடியில் இறக்கிய குழாய்களை வெளியே எடுக்கும்படி முழக்கமிட்டனர். இதனால், அங்கிருந்த அதிகாரிகள் பதிலேதும் கூறாமல் உடனடியாக வாகனத்தில் ஏறிச் சென்றனர். பொதுமக்கள் வற்புறுத்தியதால் மண்ணில் இறக்கப்பட்ட குழாய்கள் உடனடியாக வெளியில் எடுக்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் பலர் ஒன்றிணைந்து, இப்பணி இனி இங்கு நடைபெறக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டன.
அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் அங்கேயே காத்திருந்தனர். மீண்டும் இப்பணியை இங்கு தொடங்கினால் கிராம மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து துக்காச்சியை சேர்ந்த சரவணன் கூறியதாவது:
இப்பகுதியில் மீத்தேன், ஷேல்கேஸ் எடுப்பதற்காக மண் ஆய்வு மேற்கொண்டதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குழாய் பதிப்புப் பணிகளில் ஈடுபட்ட அலுவலர்களிடம் விசாரித்தபோது, பதிலேதும் கூறாமல் சென்றுவிட்டனர். இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com