உயர்கல்வி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது!

கல்லூரி உள்பட உயர் கல்வி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


கல்லூரி உள்பட உயர் கல்வி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிளஸ் 1 மதிப்பெண்களும் சேர்க்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட உத்தரவு:- பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரிய நிர்வாகக் குழுவுடன் கலந்தாலோசித்தார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, சில பிரிவுகளுக்கு மட்டும் திருத்தங்கள் வெளியிட அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத் திட்டங்களை முழுமையாகக் கற்கும் மாணவர்கள் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லாமலேயே, தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற வாய்ப்புள்ளது என்பதால், பிளஸ் 1 பொதுத் தேர்வினை தொடர்ந்து நடத்தலாம்.
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை பதிவு செய்து மொத்தம் 1,200 மதிப்பெண்களுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்குப் பதிலாக, பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு 600 மதிப்பெண்களும், பிளஸ் 2 தேர்வுக்கு 600 மதிப்பெண்களும் எனத் தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிடலாம்.
பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே...: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களே உயர் கல்வி பயில தகுதியானவர்கள். மேலும், மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே உயர் கல்வி சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் கருத்துகளைப் பரிசீலித்த அரசு, அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், மாணவர்களின் நலன் கருதி ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசு உத்தரவில் இரண்டு திருத்தங்களையும் செய்கிறது. அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோருக்கு மட்டும் தலா 600 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்ற விவரங்களைப் பதிவு செய்து தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் அளிக்கப்படும்.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் காலம் வரையில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டு மதிப்பெண் பட்டியல் அளிக்கப்படும் என்று தனது உத்தரவில் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
புதிய உத்தரவுக்கு என்ன காரணம்? : பிளஸ் 1 வகுப்புக்கு முதன்முறையாக பொதுத் தேர்வு கடந்த மார்ச்சில் நடத்தப்பட்டது. புதிய தேர்வுமுறைகள் பற்றிய போதிய தெளிவின்மை, குழப்பம் ஆகியன காரணமாக மாணவர்கள் சரியான முறையில் தேர்வுக்கு தயாராக முடியவில்லை. இதனால், பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளும் அரசு பொதுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற காரணங்களால் அரசு புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com