தஞ்சாவூரில் விநாயகர் ஊர்வலம்: 60 சிலைகள் கரைப்பு

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் சுமார் 60 சிலைகள் எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.


தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் சுமார் 60 சிலைகள் எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பாஜக, இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 65 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் 5 சிலைகள் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் கரைக்கப்பட்டன.
இந்நிலையில், மூன்றாம் நாளான சனிக்கிழமை மாலை விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ரயிலடிக்குக் கொண்டு வரப்பட்டன.
ஸ்ரீ விஸ்வரூப விநாயகர் சதுர்த்தி இந்து எழுச்சி ஊர்வல விழாக் குழு சார்பில் நடைபெற்ற ஊர்வலத்துக்குக் குழுத் தலைவர் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தார். இந்த ஊர்வலத்தைத் பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். இளங்கோ தொடங்கி வைத்தார். பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். ராமலிங்கம், மாவட்டப் பொதுச் செயலர் யு.என். உமாபதி, மாநகரத் தலைவர் வி. விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தை பாஜக விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பாஜக மாநிலச் செயலர் கே.டி. ராகவன், விவேகானந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் எஸ். பரமானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை, கரந்தை வழியாகச் சென்று வடவாற்றில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவை உள்பட மாநகரில் மொத்தம் சுமார் 60 சிலைகள் சனிக்கிழமை கரைக்கப்பட்டன. இதையொட்டி, போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவட்டத்தின் பிற பகுதிகளான திருவிடைமருதூர், வல்லம், பட்டுக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.
பட்டுக்கோட்டையில்...
அதிராம்பட்டினம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 46 விநாயகர் சிலைகள் ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அதிரை வண்டிப்பேட்டை சந்திப்பில் இருந்து தஞ்சை மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலர் விஜயகுமார் தலைமையில் புறப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா, மாநில இந்து முன்னணி நிர்வாகக் குழு உறுப்பினர் மாயக்கூத்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட 46 விநாயகர் சிலைகளும் ஏரிப்புறக்கரை கடலில் சனிக்கிழமை இரவு கரைக்கப்பட்டன. இதையொட்டி தஞ்சை எஸ்பி செந்தில்குமார் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாட்டில்...
ஒரத்தநாடு யானைக்கார தெரு தேரடியில் உள்ள அருள்மிகு காரியசித்தி விநாயகர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் விநாயகரை ஊர்வலமாக யானைக்கார தெரு, கோமுட்டித்தெரு, கடைத்தெரு, கம்மாளர்தெரு வழியாக கொண்டு சென்றனர். திரளான பொதுமக்கள் விநாயகரை வழிபட்டனர். பின்னர், விசாலாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள படிக்குளத்தில் விநாயகர் சிலை கரைப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச்செயலர் கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com