மலைபோல குவியும் சாக்கடைக் குப்பைகள்!  மக்கள் மனதில் மாற்றம் வருமா?

குப்பைகளை அகற்றுவது உள்ளாட்சியின் பணி என உதாசீனமாக இல்லாமல், குப்பைகள் மேலாண்மையில் உள்ளாட்சிக்கு ஒத்துழைக்கும் மக்களாக மாநகர மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

குப்பைகளை அகற்றுவது உள்ளாட்சியின் பணி என உதாசீனமாக இல்லாமல், குப்பைகள் மேலாண்மையில் உள்ளாட்சிக்கு ஒத்துழைக்கும் மக்களாக மாநகர மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
திருச்சி மாநகராட்சி 65 வார்டுகள், கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை,  ஸ்ரீரங்கம் ஆகிய 4 கோட்டங்களை கொண்டுள்ளது. மாநகராட்சிப்பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள் மற்றும் அனைத்து வகை கட்டடங்களில் இருந்து சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வீடுதேடிவந்து பெறப்படுகிறது.  இவைத்தவிர, 15 இடங்களில் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரங்கள் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் திருச்சி மாநகராட்சி சிறந்த மாநாகராட்சியாக மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
ஆனால், சாக்கடை மற்றும் மழைநீர் வடிந்தோடும் கால்வாய்களில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சிக்கு சவாலாகவே உள்ளது. கடந்த சில நாள்களாக மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் மழைநீர், சாக்கடையுடன் கலந்து சாலைகளில் நிற்பதை பெரும்பாலான பகுதிகளில் காண முடிந்தது. 
மழைகாலத்துக்கு முன்பாகவே மாநகராட்சி மூலம் சாலையோரம் இருபுறமும் சாக்கடை மூடிகளை அப்புறப்படுத்தி குப்பைகளை டன் கணக்கில் அப்புறப்படுத்தியது. இதனால், தொடர்ச்சியான மழைக்கு திருச்சி மாநகரம் சுகாதாரக் கேட்டிலிருந்து தப்பியது. இப்போது, மழை முடிந்தும் சாக்கடை கால்வாய்களில் குப்பைகளை அள்ளும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
உறையூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாக்கடை கழிவுகள் இருபுறமும் அள்ளப்பட்டு சாலையில் மலை, மலையாக குவித்து வைக்கப்ட்டிருந்தன. 
தொற்று நோய் பரவாமல் இருக்க சுண்ணாம்பு பவுடர்களும் இந்த குவியலை சுற்றி தூவப்பட்டிருந்தன. குப்பையிலிருந்து தண்ணீர் வடிந்தால் காய்ந்தபிறகு வாகனங்களில் ஏற்றிச்செல்ல ஏதுவாக இருக்கும் என்பதற்காக மலை,மலையாக குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. 
சாலைகளில் வாகனங்களால் சேகரமாகும் புழுதி மண் 50 சதவீதம் என்றால் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பை, கப், டம்ளர்கள், மதுபாட்டில்கள், வீட்டுக் குப்பைகள், வணிக வளாக குப்பைகள், ஹோட்டல் குப்பைகள் என பல்வேறு தரப்பு குப்பைகளும் இந்த சாக்கடைகளிலேயே கிடக்கின்றன. ஏற்கெனவே அள்ளிய பகுதிகளில் 15 நாள் இடைவெளியில் மீண்டும் அள்ளினால் அதே அளவுக்கு குப்பைகள் சேகரமாகி வருகிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த சாக்கடை குப்பைகளை முழுமையாக அகற்ற முடியாது. மாநகர மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர் மாநகராட்சி அலுவலர்கள்.
பெட்டிச் செய்தி...
மக்கள் மனதில் மாற்றம் வேண்டும்: இதுதொடர்பாக, திருச்சிமாநகராட்சி சுகாதாரத் துறையினர் கூறியது: சாக்கடை குழிகள், மனிதக் கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என மனித ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் போர்க்கொடி உயர்த்துகின்றனர். ஆனால், மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வம் செலுத்துவதில்லை. குறிப்பாக சாக்கடை, மழைநீர்வடிகால் கால்வாய்களில் குப்பைகளை வீசுவதால் மழைக்காலங்களில் ஏற்படும் கேடுகளை அறியாமல் செயல்படுகின்றனர். மழைநீர் தேங்கினாலோ, மழைநீருடன் சாக்கடை கலந்தாலோ மாநகாரட்சியை மட்டுமே குற்றம் சுமத்துகின்றனர். கடந்த இரு மாதமாக மாநகரில் சாக்கடை குப்பைகளை மட்டும் சுழற்சி முறையில் 4 முறைக்கு மேல் அகற்றிவிட்டோம். ஆனால், டன் கணக்கில் மீண்டும் குப்பை சேர்ந்துவிடுகிறது. 50 சதவீதத்துக்கும் மேல் மக்கள் பயன்படுத்தி தூக்கியெறியும் குப்பைகளே அதிகம் உள்ளது. எனவே, குப்பைகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள தொட்டிகளிலும், இடம் தேடி வரும் மாநகராட்சி வாகனங்களில் மட்டுமே செலுத்த வேண்டும். சாக்கடைகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும். மாநகராட்சி மூலம் ஒரு மாதத்தில் 200-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மட்டுமே மாற்றம் வராது. மக்கள் மனதிலும் மாற்றம் வர வேண்டும். சாக்கடை, வடிகால் என்பது கழிவுநீர், மழை தண்ணீர் செல்வதற்கான பாதை. குப்பைகள்கொட்டுவதற்கல்ல என்பதை  மக்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டும் என்கின்றனர் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com