ஹார்வர்டு பல்கலை.யில் தமிழ் இருக்கைக்கு திருச்சி தமிழ்ச் சங்கம் ரூ.1 லட்சம் அளிப்பு

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தது. 

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தது.
அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர்.
இது சம்பந்தமாக நிதியுதவி வேண்டி தமிழக முதல்வருக்கு அளித்த கடிதத்தின்படி, தமிழக அரசு ரூ.10 கோடி அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்த் திரையுலகினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், ஆசிரியர்கள் நிதிதிரட்டி வழங்கி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. சங்க வளாகத்தில் புதன்கிழமை இந்த நிதியளிப்பு விழா கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஹார்வர்டு பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முனைவர் ஆறுமுகத்திடம், சங்கத் தலைவர் ஐ. அரங்கராசன் வழங்கினார். சங்க அமைச்சர் சி. சிவக்கொழுந்து, துணைத் தலைவர்கள் இரா. வரதராசன், ம. செந்தில்வேல், பொருளாளர் சு. தனேந்திரன், துணை அமைச்சர்கள் ம.மாணிக்கம், பெ. உதயகுமார், இராசு, நாச்சிமுத்து, அ. சையத் ஜாகிர் உசேன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
திருச்சி தமிழ்ச் சங்கம் அளித்த ரூ.1 லட்சமானது பாரத ஸ்டேட் வங்கி மூலம் அமெரிக்க டாலர்களாக மாற்றப்பட்டு, பல்கலை. தமிழ் இருக்கை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி காசோலையை பெற்றுக் கொண்ட ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முனைவர் ஆறுமுகம் கூறியது: தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. இருக்கை தொடங்க காரணமாக இருந்த மருத்துவர்களே 1 மில்லியன் டாலர் அளித்துவிட்டனர். இதர வகையில் நன்கொடையாக 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. தொடர்ந்து நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com