மாநகராட்சி ஆணையருடன் ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் கலந்துரையாடல்

திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரனுடன், ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெறும் 45 மாணவர், மாணவிகள் வியாழக்கிழமை நிர்வாகத் திறன் குறித்து கலந்துரையாடினர்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரனுடன், ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெறும் 45 மாணவர், மாணவிகள் வியாழக்கிழமை நிர்வாகத் திறன் குறித்து கலந்துரையாடினர்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பயிலும் 45 மாணவர், மாணவிகள் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த மாணவர்கள் திருச்சி மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மாநகராட்சியின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன் குறித்து கலந்துரையாடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி ஆணையர் ந.ரவிச்சந்திரன் பேசியது: திருச்சி மாநகராட்சியானது மத்திய அரசால் சிறந்த மாநகராட்சியாக இருமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளது. தூய்மை நகரங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்துவதில் பிற மாநகராட்சிகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது. குப்பையிலிருந்து இயற்கை உரம் தாயரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். கட்செவி, முகநூல் கணக்குகள் மூலம் பொதுமக்களிடையே 24 மணிநேரமும் தொடர்பிலிருந்து புகார் மற்றும் குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெறுவதற்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து மாணவர்கள், மாநகராட்சியின் நிர்வாகத் திறன், கட்டமைப்பு, நிதி, குடிநீர், சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக தங்களது சந்தேகங்களுக்கு கேள்விகள் எழுப்பி விளக்கங்கள் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி செயற்பொறியாளர் எஸ். கண்ணன், ஜமால் முகமது கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மஸ்கர் நஸீப் கான், பேராசிரியர்கள் செய்யது முகமது, சிராஜுதீன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com