ஒக்கி புயல்: மத்திய அரசின் உதவிகளை மாநில அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் உதவிகளை மாநில அரசு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
ஒக்கி புயல்: மத்திய அரசின் உதவிகளை மாநில அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் உதவிகளை மாநில அரசு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன்.

திருச்சி சிந்தாமணி பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 135- ஆவது  பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சகோதரி நிவேதிதையின் 150-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி  ராமகிருஷ்ண மடம், உளுந்தூர்பேட்டை சாரதா பீடம் ஒருங்கிணைப்பில் 2 லட்சம்  கல்லூரி மாணவிகளைச் சென்றடையும் வகையில் 2018, ஜனவரி 22 முதல் பிப்ரவரி 22 -ஆம் தேதி வரை  ரதயாத்திரை இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெறஉள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மீனவர்கள் கரை ஒதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பகுதிகளில் மீனவர்களையும் உடன் அழைத்துச் சென்று தேடும் பணியில்  பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

மீனவர்களைக் காப்பாற்ற அனைத்து வழிகளிலும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்கள் குறித்த முகவரியுடன் கூடிய முழு விவரத்தை அளிக்குமாறு மாநில அரசிடம் மத்திய அரசு கோரியுள்ளது. மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு கடுமையாக உழைத்து வருகிறோம்.   இதை மத அரசியலாக காட்ட  பயன்படுத்த வேண்டாம்.
மீனவர்களை மீட்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் மத்திய அரசு அனைத்து விதத்திலும் உதவியாக உள்ளது.

மாநில அரசு இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  அங்கு சென்று வந்த பிறகும் மக்களிடம் நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே மாநில அரசின் கவனம்   உடனடியாக கன்னியாகுமரி பக்கம் திரும்ப வேண்டும். மூத்த அமைச்சரை அங்கு அனுப்பி நிவாரணப் பணிகள் முடியும் வரை  அங்கிருந்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றார் வானதி சீனிவாசன்.

விழாவில்,  மாநிலப் பொதுச் செயலர் எம்.  முருகானந்தம், கோட்டப் பொறுப்பாளர் எம்.சிவசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் தங்க. ராஜய்யன், இளைஞரணித் தலைவர் கௌதம் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com